தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஜி 60 மரியாதை அணிவகுப்புப் படையில் முதல் முறையாக இடம்பெறும் குடிமைத் தற்காப்புப் படை

2 mins read
db5d2a50-7a5f-4742-b4ca-dc3c57f83a07
இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்போரில் சிலர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டு முதல் முறையாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தேசிய தின அணிவகுப்பின்போது மரியாதை அணிவகுப்புப் படையில் இடம்பெறவுள்ளது.

அதற்கு அப்பாற்பட்டு, 10வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் முழுத் தொண்டூழியர் அணிப் படையும் முதல் முறையாக அணிவகுப்பில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் எஸ்ஜி 60 கொண்டாட்ட தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூரர்கள் மேம்படுத்தப்பட்ட அணிவகுப்பையும், கொண்டாட்ட நிகழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம்.

பாடாங்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை கண்டிராத அளவில் அதிக எண்ணிக்கையில் மொத்தம் 40 அணிவகுப்புப் படைகள் பங்கேற்கவுள்ளன.

வெவ்வேறு பின்னணிகளிலிருந்து மொத்தம் 2,100 பேர் அணிவகுப்பிலும், கொண்டாட்டத்திலும் பங்குபெறுவர்.

ஆறு மரியாதை அணிவகுப்புப் படைகள், சிங்கப்பூர் ஆயுதப் படையின் வண்ணக் கொண்டாட்டம், குறிப்பிட்ட சில சிங்கப்பூர் ஆயுதப் படைப் பிரிவுகள், உள்துறைக் குழு ஆதரவு வழங்கும் படைகள், இளைய சீருடை அமைப்புகள், இசைக் குழு, நேரடிப் பாடகர் குழு ஆகியவை அந்த 2,100 பேரில் அடங்குவர்.

வியாழக்கிழமை (ஜூன் 12) சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தின அணிவகுப்பு, கொண்டாட்டத்தின் தலைவர் கர்னல் லிம் யு சிங், 1990ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் 70 அணிவகுப்புப் படைகள் இடம்பெற்றதாகவும், அதன் பிறகு இந்த ஆண்டுதான் அதிக எண்ணிக்கையில் அணிவகுப்புப் படைகள் இடம்பெறவுள்ளதாகவும் சொன்னார்.

அணிவகுப்புப் படைகள் அணிவகுத்துச் செல்லும் நேரம், அவர்களுக்கு இடையிலான இடைவெளி ஆகியவை மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கர்னல் தெரிவித்தார்.

அதிபருக்கான குண்டு முழக்க மரியாதை நடவடிக்கையில் 142 படைவீரர்கள் ஈடுபடுவர். அணிவகுப்புத் தளபதி லெப்டினென்ட் கர்னல் ஃபிர்டாஉஸ் கசாலி, அணிவகுப்பு RSM சார்ஜென்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி லிம் ஜியே ஹுய் அணிவகுப்பை வழிநடத்துவர்.

மூன்று ஆண்டுகளில் தேசிய தின அணிவகுப்பில் மரியாதை அணிவகுப்புப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்தது இது இரண்டாவது முறையாகும்.

அணிவகுப்பும், கொண்டாட்டமும் தொடங்குவதற்கு முன்னர் பொதுமக்கள் மரீனா ஸ்குவேரில் நடைபெறும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் வண்ணக் கொண்டாட்டத்தை அருகில் நின்று பார்த்து மகிழலாம்.

அணிவகுப்பு, கொண்டாட்டத்தின்போது பாடாங்கில் இருக்கும் பார்வையாளர்கள் நேரடிப் பாடகர் குழுவினரை அருகிலிருந்து பார்க்கலாம்.

அதிபர் பாடாங்கிற்கு வந்த பிறகு இளைய சீருடை அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ‘மாஜுலா 60’ வடிவத்தில் நிற்பார்கள்.

அணிவகுப்பு, கொண்டாட்டத்தின் இறுதி அங்கத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படை, உள்துறைக் குழு, இளைய சீருடை அமைப்புகளின் படைகள் பாடாங்கிலிருந்து வெளியேறும்போது பார்வையாளர்கள் இருக்கும் இடங்களின் வழியாக அணிவகுத்துச் செல்வார்கள்.

குறிப்புச் சொற்கள்