நீ சூன் ராணுவ முகாமில் சுமார் 70 ராணுவ வீரர்கள் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் அன்பளிப்புப் பைகளைத் தயாரிக்க அனுதினமும் நான்கு வாரங்களாக உழைத்துவந்துள்ளனர்.
எனினும், சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு 30 விழுக்காட்டுக்கும் குறைவான ராணுவ வீரர்களே இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்குக் காரணம், பணிகளைச் சீராக்கும் மூன்று நவீனத் தொழில்நுட்ப வகைகளாகும்.
கைகொடுக்கும் இயந்திரக் கைகள்
பத்து இயந்திரக் கைகள். நடுவில் ஒரு ‘கன்வெயர் பெல்ட்’ (conveyor belt). அவற்றில் ஒன்பது கைகள் பானங்கள், ஒட்டுப்படங்கள், மெல்லிழைத் தாள்கள் போன்றவற்றை எடுத்துப் பைகளுக்குள் வைக்கின்றன. கடைசியாக உள்ள அந்தக் கை, நிரப்பப்பட்ட பையை அகற்றி, புதிய பையை வைக்கிறது.
இதற்கு முன்பு முதன்முறையாக இயந்திரக் கைகள் 2022ல் தேசிய தின அணிவகுப்பு அன்பளிப்புப் பைகளை நிரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதைவிட இவ்வாண்டின் இயந்திரக் கைகள் அதிகம் சீராகவும் விரைவாகவும் இயங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இவ்வாண்டு முதன்முறையாக ஓர் இயந்திரக் கையில் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் புகைப்படக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. பொருள்களைச் சரியாக அடையாளங்காண இது பயன்படுகிறது.
“இவ்வியந்திரங்களால், எட்டுப் பேர் செய்யும் வேலை நான்கு பேருடன் முடிந்துவிடுகிறது. ஒரு நாளில் பத்துக் கைகளும் மொத்தத்தில் 1,000 முதல் 1,250 பைகளைத் தயாரிக்கின்றன,” என்றார் அன்பளிப்புப் பை தயாரிப்புக்கான செயற்குழுத் தலைவர் மேஜர் டெஸ்மண்ட் லிம்.
இவ்வியந்திரங்கள் பரிசோதனைக் கட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து வீரர்களும் குறைந்தது ஆறு குழுக்களாகப் பிரிந்து பைகளை நிரப்பி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் அதிகபட்சம் 10,000 பைகள் தயாரிக்கப்படுகின்றன.
தோள்கொடுக்கும் ‘எக்ஸோஸ்கெலிட்டன்’
நிரப்பப்பட்ட பைகளை அட்டைப்பெட்டிக்குள் அடுக்கியதும் அதைத் தூக்கிவைக்க இவ்வாண்டு முதன்முறையாக ‘எக்ஸோஸ்கெலிட்டன்’ எனப்படும் வெளி-எலும்புக்கூடு ஆடை பயன்படுகிறது.
இருவகையான ‘எக்ஸோஸ்கெலிட்டன்’கள் உபயோகிக்கப்படுகின்றன.
ஒன்று, ‘ஜெர்மன் பையானிக்’ எனப்படும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. பத்து கிலோ எடை கொண்டுள்ள இதனை அணிந்ததும், வீரர்கள் சுமக்கும் சுமை 30 கிலோகிராம் அளவிற்குக் குறையும்.
மற்றொன்று, சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக உயிரியல் ரோபாடிக்ஸ் கூடம் பரிசோதனைக்காகத் தந்துள்ள 5-6 கிலோகிராம் எடையிலான எக்ஸோஸ்கெலிட்டன்.
பாரத்தோடு நகரும் தானியங்கி இயந்திர மனிதர்கள்
பல அட்டைப்பெட்டிகளும் ஒன்றாக அடுக்கப்பட்டதும், அவற்றைத் தூக்கிச் செல்கின்றன ஒரு டன் வரை பாரத்தைச் சுமக்கக்கூடிய நகரும் இயந்திர மனிதர்கள். அவை தரையிலும் மேசையிலும் உள்ள கியூஆர் குறியீடுகளை அடையாளங்கண்டு செயல்படுகின்றன.
மனித-இயந்திர முயற்சியால் இம்மாதக் கடைசியில் அனைத்து தேசிய தின அணிவகுப்பு அன்பளிப்புப் பைத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடையும் எனக் கணிக்கப்படுகிறது. பரிசோதிக்கப்பட்ட மூன்று தொழில்நுட்பங்களையும் ராணுவத்தின் மற்ற நடவடிக்கைகளிலும் பயன்படுத்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன.

