தேசத்தின் 59வது பிறந்தநாளைக் கொண்டாட காத்திருக்கும் 20,000க்கும் மேற்பட்டோர் கூடியுள்ள பாடாங் அரங்கத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது.
நகர மண்டபம், ராஃபிள்ஸ் பிளேஸ், எஸ்பிளனேட் பெருவிரைவு ரயில் நிலையங்களிலிருந்து பாடாங்கை நோக்கி ஆயிரக்கணக்கானோர் வந்தவண்ணம் இருக்க, ஏற்கெனவே மாலை 4 மணியிலிருந்து அரங்கத்தை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டனர் மேலும் பலர்.
மாலை 4.30மணியளவில் பெருமழை பெய்யத் தொடங்கிய நிலையில், மக்கள் அனைவரும் அரங்கத்தில் இருந்தவாறு தேசப் பாடல்களைப் பாடியவண்ணம் அமர்ந்திருந்தனர்.
புரொமோன்டரி@மரினா பே வளாகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்திலும் அதே நிலைதான்.
வெள்ளமெனத் திரண்ட மக்கள், மழையங்கி அணிந்தபடி நாட்டுப்பற்று மேலோங்க பாடல்கள் பாடி, ஆடி மகிழ்ந்து மழையையும் பொருட்படுத்தாது கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
இதற்கிடையே, மாலை 5.15 மணியளவில் பிரதமர் லாரன்ஸ் வோங் சமூக ஊடகத் தளம் மூலம் வெளியிட்ட காணொளிப் பதிவில் தாம் தேசிய தின அணிவகுப்பிற்குத் தயாராக இருப்பதாகவும் அங்கு அனைவரையும் சந்திக்க ஆவலாகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.