தேசிய தின அணிவகுப்பு: முன்பு நுழைவுச்சீட்டு பெறாதோருக்கு உதவ நடவடிக்கை

தேசிய தின அணிவகுப்பு: முன்பு நுழைவுச்சீட்டு பெறாதோருக்கு உதவ நடவடிக்கை

2 mins read
குலுக்கல் முறையில் முன்பு நுழைவுச்சீட்டுகளைப் பெறாதவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சி
adfaf6e8-de86-4e2d-a086-7476ef5ecf38
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் இரண்டாம் முன்னோட்ட நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற வாணவேடிக்கைப் படைப்பு. - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

தேசிய தின அணிவகுப்பை நேரில் காண்பதற்கான நுழைவுச்சீட்டுகளை குலுக்கல் முறையில் பெறாத சிங்கப்பூரர்களுக்கு அந்த வாய்ப்பை அதிகரிக்கும் முறை தற்போது நடப்பில் இருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய தின அணிவகுப்புக்கான சிறப்புக் குழு சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட பிறகு அந்த முறை நடப்பில் இருந்துவருவதாக அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) கூறினார். மேலும், தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க மாற்று விநியோக முறைகள் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் நுழைவுச்சீட்டுகளை வழங்குவது அத்தகைய விநியோக முறைகளில் அடங்கும். நேரடி நுழைவுச்சீட்டுகளைப் பெற விரும்புவோருக்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்தபடி அதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் திரு சான்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்வி

பாசிர் ரிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேலரி லீ எழுப்பிய நாடாளுமன்றக் கேள்விக்கு திரு சான் எழுத்து வடிவில் பதிலளித்தார். பொதுமக்களுக்குத் தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகள் மேலும் எளிதில் கிடைக்கச் செய்யும் நோக்கில் குலுக்கல் முறையை அரசாங்கம் பரிசீலிக்குமா என்றும் நுழைவுச்சீட்டுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்படுமா என்றும் வேலரி லீ கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சில ஆண்டுகளாகக் குலுக்கலில் பங்கேற்று நுழைவுச்சீட்டு கிடைக்காதோருக்கு அதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து அமைச்சு பரிசீலிக்குமா என்றும் அவர் கேட்டார்.

அதற்கு எழுத்துபூர்வமாகப் பதலிளத்த திரு சான், அடுத்தடுத்து பொறுப்பு வகித்துவரும் தேசிய தின அணிவகுப்பு நிர்வாகக் குழுக்கள் கூடுமானவரை அதிகமானோர் அணிவகுப்பை நேரில் காண வகைசெய்யும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிட்டார். தேசிய தின அணிவகுப்பை நேரில் பார்க்கவேண்டும் என்ற சிங்கப்பூரர்களின் ஆசையை உணர்வதால் அக்குழுக்கள் அவ்வாறு செய்வதாக அவர் சொன்னார்.

எத்தனை பேர் தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டுகளிக்க முடியும் என்பது அணிவகுப்பு நடைபெறும் இடத்தைப் பொறுத்ததாகும்.

தேசிய விளையாட்டரங்கில் அணிவகுப்பு

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகளில் முதன்முறையாக அணிவகுப்பு அங்கு நடைபெறுகிறது.

தேசிய விளையாட்டரங்கம்.
தேசிய விளையாட்டரங்கம். - படம்: பெரித்தா ஹரியான்

தேசிய விளையாட்டரங்கில் 42,000 பேர் வரை அமரலாம். இந்த எண்ணிக்கை, பாடாங்கில் இருப்பதைவிட கிட்டத்தட்ட 55 விழுக்காடு அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்