பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை: பாட்டாளிக் கட்சி வரவேற்பு

3 mins read
e53e487e-dde1-4153-9066-4ccb0dc68017
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தேசிய தினப் பேரணி உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லாவண்யா வீரராகவன், கி. ஜனார்த்தனன்

தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த திட்டங்களை வரவேற்பதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.

வேலையிழப்பு, அந்நிலையைச் சந்திப்பவர் மட்டுமன்றி குடும்பத்தையே பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் மாதம் 6,000 வெள்ளி வரை தற்காலிக நிதி உதவி வழங்குவது சிறந்ததொரு திட்டம் என்று தங்களது அறிக்கையில் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 2023ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் தங்கள் கட்சி இதுகுறித்து வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டியதுடன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆறு மாதங்கள் வரை அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 40 விழுக்காட்டைப் பெற வேண்டும் எனத் தங்கள் கட்சி 2020 பொதுத்தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததையும், பணிநீக்கக் காப்பீட்டுத் திட்டத்தை வடிவமைத்ததையும் குறிப்பிட்டுள்ளது பாட்டாளிக் கட்சி.

குழந்தைப் பிறப்புக்காக பெற்றோர்க்குக் கூடுதல் 10 வார கால பகிரப்பட்ட விடுப்பு அளிக்கப்படுவது பெற்றோராகவுள்ளோர்க்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. கடந்த அக்டோபர் 2020ல் தங்கள் கட்சி 24 வாரப் பகிரப்பட்ட விடுப்பு குறித்து முன்மொழிந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, ஒற்றையர்களுக்கான வீடு வாங்கும் வயது வரம்பை 35 வயதிலிருந்து 28ஆக குறைக்கும்படி தொடர்ந்து பேசி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சி, விரைவில் அந்த மாற்றத்தையும் கொண்டுவர அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கிடையே, தேசிய தினப் பேரணி உரையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை குறித்த தனது கருத்தைப் பதிவு செய்தார் இந்து ஆலோசனை வாரியத் தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன். அவர், இளவயது பிள்ளைகள் உள்ள பெற்றோர்க்கு, மூத்தோர், பணியிலிருப்போர் என அனைவரையும் உள்ளடக்கிய அறிவிப்புகள் கொண்ட உரையாக இதனைத் தாம் கருதுவதாகக் கூறினார்.

சிங்கப்பூரை மேலும் சிறப்பான நாடாக்கும் முயற்சியில் பங்களிக்கும் அனைத்து கூறுகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்தது மகிழ்ச்சி என்றார் அவர்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது நாட்டின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையை வளர்க்கும் என்றும் அதனையொட்டிய அறிவிப்புகள் முக்கியமானவை என எண்ணுவதாகவும் சொன்னார் பூன் லே அடித்தள அமைப்புகளின் தலைவரும், சிங்கப்பூர் உருட்டுப்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தொழில்நுட்ப இயக்குநருமான சுரேன் சந்திரசேகரன், 34.

மேலும், “காலாங் அலைவ் பெருந்திட்டம் விளையாட்டில் சிங்கப்பூர் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக எடுத்துவைக்கப்பட்ட முக்கியமானதோர் அடி. இது விளையாட்டை எதிர்காலமாகக் கொண்டு தங்களை ஆயத்தப்படுத்த எண்ணும் இளையர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஓர் அறிவிப்பு,” என்றார்.

பொருளியல் சூழல் அதிகம் மாறும் சூழ்நிலையிலும் வசதிகுறைந்தவர்களுக்கும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டு, பொதுப் பயனீட்டுச் சலுகைகள் கொடுக்கப்படுவது மனநிறைவு அளிப்பதாக கிளமெண்டி இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் தெய்வானை சின்னப்பன், 69, தெரிவித்தார்.

இதனை ஆமோதித்த அடித்தளத்தலைவர் சுரேன் சந்திரசேகரன், புதிய முடிவு முற்போக்கானது எனப் பாராட்டினார். புதிய தந்தையர் பலர் வேலையிடத் தேவைகளால் விடுப்பு எடுக்கத் தயங்குகின்றனர் என்பது உண்மை என்றும் அவர் சொன்னார்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் கட்டி முடிக்கத் தாமதமான ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று அடித்தளத் தலைவரும் எஸ்எம்ஆர்டி தொழிற்சங்க உறுப்பினருமான பிரவிதா சுபின் தெரிவித்தார்.

தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளை பெற்றோரின் வீடுகளுக்கு அருகில் வாங்க ஆசைப்படும் ஒற்றையர், திருமணமானவர்களுக்குத் தரப்படும் முன்னுரிமையையும் பெறுவர் என்ற அறிவிப்பு, காலத்தின் கட்டாயத்தை நிறைவேற்றுவதாகத் திருவாட்டி பிரவிதா கூறினார்.

“மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், சிங்கப்பூருக்கு இந்தத் தீர்வு பொருத்தமானது,” என்றும் அவர் சொன்னார்.

கூடுதல் பிள்ளைகளுக்கு அதிக செலவு, நேரப் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள தயங்கும் தம்பதிகளுக்கு மகப்பேற்று விடுப்பின் அதிகரிப்பு, பெரும் ஊக்கத்தைத் தரும் என வர்த்தக இயக்குநர் துர்கா எட்டிக்கன், 38, தெரிவித்தார்.

“ஒரு பிள்ளை போதும் எனும் நிலைமையில் பெற்றோர் பலர் உள்ளனர். கூடுதல் விடுப்பு நாள்களால் பெற்றோர் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்துப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள முடிகிறது. பிள்ளை பெறும் பெற்றோர்களிடம் அரசாங்கம் இவ்வாறு ஆதரவு போக்குடன் நடந்துகொள்வதால் நிறுவனங்களும் அதே போக்கில் செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,” என்று திருமதி துர்கா கூறினார்.

குறிப்புச் சொற்கள்