உணவங்காடி நிலையங்களில் உணவு வாங்கச் செல்வதற்குமுன் இருக்கைகளில் முன்னதாக இடம்பிடிக்க முயல்வோருக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
மெல்லிழைத்தாள் அல்லது வேறு பொருள்களைப் பயன்படுத்தி தங்களுக்கான இடத்தைப் பிடிக்க முயல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடும் செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து வாரியம், அதனை மறுக்கும் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.
“இந்தச் செய்திகள் பொய்யானவை. அத்துடன், முன்னதாக இடம்பிடிக்கக்கூடாது என்பதும் இல்லை,” என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
உணவு வாங்குவதற்கு முன் இடங்களை முன்கூட்டியே பிடித்துக்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள வட்டாரங்களைத் தேசிய சுற்றுப்புற வாரியம் அறிமுகம் செய்யும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்று குறிப்பிடுகிறது.
உணவு வாங்கச் செல்லும்போது தங்களுக்கான இடங்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களைத் திரும்பப் பெறுவதற்கு உணவு உண்போர், 2 வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்தப் பதிவு குறிப்பிட்டது.
அத்துடன், மீண்டும் குற்றம் புரிபவர்களைத் திருத்துவதற்காக அவர்கள் நின்றுகொண்டே சாப்பிட வேண்டும் என்றும் அப்பதிவு கூறுகிறது.
இந்தத் தகவல்கள் பொய் என்றது வாரியம்.
உணவங்காடி நிலையங்களில் சாப்பிடும்போது பிறருக்கு அக்கறை காட்டுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம், தனது பதிவு ஒன்றில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

