‘ஜென் ஜீரோ’ (GEnZero) எனும் முதலீட்டுத் தளத்தைப் போல பாசாங்கு செய்து நடத்தப்படும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஜூலை 23ஆம் தேதியன்று தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் இணையப்பக்கத்தில் எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றைப் பதிவேற்றம் செய்தது.
கைப்பேசி செயலி வாயிலாக கரிமப் புள்ளிகள் (carbon credits) வாங்க ஊக்குவித்து தங்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக பொதுமக்களில் பலர் தெரிவித்தனர் என எச்சரிக்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படுவதை விரைவுபடுத்தும் இலக்குடன் ‘ஜென் ஜீரோ’ முதலீட்டுத் தளத்தை தெமாசெக் நிறுவனம் நிறுவியது.
மோசடிக்காரர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவற்றின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இணைப்புகளும் உள்ளன.
செயலியில் பதிவு செய்ததும், கட்டணம் செலுத்துவதற்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவிடுமாறு தெரிவிக்கப்படும்.
“இந்த கரிமப் புள்ளிகள் திட்டத்துக்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,” என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து விழப்புடன் இருக்க வேண்டும் என்றும் மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் சிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

