தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை ரயில் ஒன்றில் மின்சாரம் தடைபட்டதால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லென்டோர் நிலையத்தை நோக்கிச் செல்லும் பாதையில் உட்லண்ட்ஸ் நிலையத்திற்கும் உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்திற்கும் இடையே ரயில் சேவை தடைபட்டது.
நிறுவன ஊழியர்களின் உதவியுடன், 60 பயணிகள் ரயிலில் இருந்து பாதுகாப்பாக உட்லண்ட்ஸ் நிலையத்தைச் சென்றடைந்தனர்.
கண நேர மின்தடையால் சமிக்ஞைக் கருவிகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
எஸ்எம்ஆர்டி, நிலப் போக்குவரத்து ஆணையம், கருவிகளை உற்பத்தி செய்த ‘ஆல்ஸ்டோம்’, ‘கவாசாக்கி’ நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக் குழு மின்தடை சம்பவம் குறித்து மேல்விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.15 மணி வரை ரயில் சேவை தடைபட்டிருந்த வேளையில் பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேவைத் தடையால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை காலை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

