தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர் மழை காரணமாக சிங்கப்பூர் சாலைகளில் கிட்டத்தட்ட 100 குழிகள்

1 mins read
da420ae1-6f29-4b0e-b56f-80859bcaf7a3
தானா மேரா கடற்கரை சாலையில் காணப்பட்ட பல்வேறு குழிகள் ஜனவரி 12ஆம் தேதி சரிசெய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. - படம்: ஸ்டீவன் லிம் ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக இவ்வாண்டின் முதல் 12 நாள்களில் மட்டும் சாலைகளில் ஏறத்தாழ 100 குழிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, தானா மேரா வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக அதிகமான சிறுபள்ளங்கள் உருவாகி உள்ளன.

அவற்றில் ஒன்றை ஜனவரி 11ஆம் தேதி சைக்கிளோட்டி ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டார்.

தானா மேரா கடற்கரைச் சாலையில் உள்ள சாலையின் மூன்று தடங்களில் 20க்கும் மேற்பட்ட சிறுகுழிகள் இருந்ததைப் படம் பிடித்த அவர் அதனை தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

ஜனவரி 10 முதல் 13 வரை பருவமழை அதிகமாகப் பெய்ததன் காரணமாக நீர் நிறைந்த குழிகள் காணப்படுகின்றன.

அந்தக் குழிகள் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றில் பல கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) சரிசெய்யப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 9) சாலைகளை ஆணைய அதிகாரிகள் சோதித்தபோது ஒரே ஒரு குழி காணப்பட்டதாகவும் அது உடனடியாக மூடி சரிசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி 1 முதல் 12 வரை கிட்டத்தட்ட 100 சாலைக் குழிகள் கண்டறியப்பட்டன. இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டின் இதே நாள்களில் காணப்பட்ட 776 குழிகளைக் காட்டிலும் இது குறைவு.

குறிப்புச் சொற்கள்