15 மாத வேட்டையில் 18,000 மின்சிகரெட் குற்றவாளிகள் சிக்கினர்

2 mins read
a4663fc8-73d0-4d25-98a0-6b2ada649213
சோதனை நடவடிக்கைகளின்போது $41 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான சானதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகளை வைத்திருந்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக 2024 ஜனவரி முதல் இவ்வாண்டு மார்ச் வரை கிட்டத்தட்ட 18,000 பேர் பிடிபட்டனர்.

சுகாதார அறிவியல் ஆணையமும் சுகாதார அமைச்சும் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்று உள்ளது.

மின்சிகரெட் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக்கிய பின்னர் அவர்கள் சிக்கினர்.

ஏறத்தாழ 15 மாதங்கள் நீடித்த அந்த நடவடிக்கைகளின்போது $41 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.

மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்பான சாதனங்களையும் கையாளும் பெரிய சட்டவிரோதக் கும்பல்களுக்கு எதிரான 50 சோதனை நடவடிக்கைகளை சுகாதார அறிவியல் ஆணையம் வெற்றிகரமாக முடித்துள்ளது.

மின்சிகரெட் குற்றங்களுக்காக நீதிமன்றத் தலையீடின்றி விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தத் தவறிய 27 பேர் மீது ஆணையம் வழக்குத் தொடுத்துள்ளது. அவர்களில் எழுவர் பெண்கள். அந்த 27 பேரும் 20 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்கள் தவிர, மின் சிகரெட்டுகளை விற்றதாக 60 பேர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.

மின்சிகரெட் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறுவோர் கூடுதல் அபராதத் தொகையுடன் நீண்டகால சிறைத் தண்டனையையும் எதிர்நோக்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பிடிபட்ட 60 பேர் கொண்ட கும்பலில், $5 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்சிகரெட் சாதனங்களில் தொடர்புடைய சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த இருவரும் உள்ளனர்.

அவர்களில் ஒருவரான ஐவன் சின் என்பவருக்கு $16,000 அபராதமும் 10 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டனர்.

மற்றவரான தோ வீ லியோங் என்பவருக்கு $14,000 அபராதமும் 10 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.

மின்சிகரெட் கடத்தலுக்காக இதுவரை விதிக்கப்பட்ட ஆகக் கடுமையான தண்டனைகள் இவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்