நிலம், கடல், ஆகாய வழிகள் மூலமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த கிட்டத்தட்ட 200 பயணிகளுக்குப் பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ வெளியேறும்போதோ கையில் இருக்கும் ரொக்கப் பணம் $20,000 அல்லது அதற்குமேல் தாண்டினால் அதுகுறித்து அதிகாரிகளிடம் அறிவிப்பது கட்டாயம். சிங்கப்பூர் வெள்ளி மட்டுமல்லாது அனைத்துலக நாணயங்களும் அந்தக் கணக்கின்கீழ் வரும்.
அவ்வாறு செய்யத் தவறிய அல்லது தவறான தொகையை அறிவித்த 14 வெளிநாட்டுப் பயணிகளை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவர்களில் 26 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்கள் மே 21ஆம் தேதி பிடிபட்டனர். அவர்கள் $20,700க்கும் $380,139க்கும் இடைப்பட்ட, பல்வேறு நாடுகளின் ரொக்கப் பணத்தை சிங்கப்பூருக்குள் கொண்டுவந்தனர்.
அதேபோல, 55 வயது ஆடவர் ஒருவர் சிங்கப்பூருக்குள் நுழையும்போது $399,965 மற்றும் 1,621 ரிங்கிட் கொண்டுவந்தார். ஆனால், அதிகாரிகளிடம் அந்த மதிப்பைக் குறைத்து அறிவித்தார். இரு நாள்கள் கழித்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்த ரொக்கப் பணம், அந்த ஆடவரின் உரிமமற்ற கடன் வழங்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்று சந்தேகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 21 முதல் மே 27 வரை பல்வேறு துறைகளின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 பயணிகளும் பிடிபட்டனர்.
காவல்துறை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சுங்கத் துறை, தேசிய பூங்காக் கழகம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியன சனிக்கிழமை (மே 31) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிடிபட்டோரில் 153 பயணிகள் சிகரெட் அல்லது புகையிலைப் பொருள்கள், மதுபானம் ஆகியவற்றுக்கான வரியை அறிவிக்கவும் செலுத்தவும் தவறியவர்கள். மேலும், இறக்குமதிப் பொருள்களுக்கான பொருள், சேவை வரி அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் அதிகமாக இருந்தபோது அதுகுறித்து அறிவிக்காதோரும் அதனைச் செலுத்தாதோரும் அவர்களில் அடங்குவர்.

