சிங்கப்பூரின் நான்கு வனவிலங்குப் பூங்காக்களும், அருகிவரும் உயிரினங்கள் உள்படப் புதிதாகக் கிட்டத்தட்ட 800 குட்டி விலங்குகளைக் கடந்த ஆண்டு வரவேற்றன.
இந்தக் குட்டி மிருகங்கள் 126 உயிரினங்களைச் சேர்ந்தவை என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் புதன்கிழமை (மார்ச் 8) தெரிவித்தது.
அனைத்துலக பாதுகாப்பு ஒன்றியம் அழியும் ஆபத்தில் இருக்கக்கூடிய இயற்கைசார் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 38 விலங்குகளும் இந்தப் புதிய வருகையில் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி, ஜூரோங் பறவைப் பூங்கா, ரிவர் ஒன்டர்ஸ் ஆகிய நான்கு இடங்களைக் குழுமம் நிர்வகித்து வருகிறது.
ஜூரோங் பறவைப் பூங்காவின் செயல்பாடுகள் கடந்த ஆண்டோடு முடிவடைந்தபோதும் அதற்கு முத்தாய்ப்பாக 22 ஆண்டுகளுக்குப் பிறகு அழியும் ஆபத்தில் இருக்கக்கூடிய 'காக்கட்டூ' வகை ஒன்றின் வருகை அமைந்தது.
இந்தோனீசியாவில் நடக்கும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தாலும் இருப்பிட இழப்பாலும் மிக அருகிவிட்ட இந்த வகை பறவையின் குஞ்சு, ஜூரோங் பறவைப் பூங்காவின் இனப்பெருக்க, ஆய்வு நிலையத்தில் ஆட்களால் வளர்க்கப்பட்டது.
விலங்கியல் தோட்டத்தின் ஆக வயதான நீர்யானைத் தம்பதிக்கு 14வது கன்று பிறந்ததும் சிறப்பான ஒரு வருகையாக இருந்தது.
இந்த நீர்யானைக் கன்று அண்மையில் அதன் அம்மாவுடன் பெரிய, ஆழமான குளம் கொண்ட காட்சிக்கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இனப்பெருக்கம் செய்வதற்கு அதிகச் சவால் விடுக்கும் ஓர் உயிரினமான ராட்சச எறும்பு உண்ணி தொடர்பில் ரிவர் ஒன்டர்ஸ் சாதனை படைத்தது. பூங்காவில் பிறந்த ஐந்தாவது எறும்பு உண்ணி இது.
முன்னதாக 2011ல் 160 உயிரினங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 900 புதிய விலங்குகளை வரவேற்ற நிலையில், கடந்த ஆண்டின் எண்ணிக்கை சற்று சரிந்திருந்தது.