சில தொடக்கப்பள்ளிகளின் இணைப்புப் பள்ளிகளாகச் சில உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன.
தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச புள்ளிகளைப் பெற்று இத்தகைய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இணைப்பு உயர்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம்.
இந்தக் குறைந்தபட்ச புள்ளிகளான அளவுகோலைச் சில பள்ளிகள் கடுமையாக்கியிருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சூன் சிங் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லுயிஸ் சுவா எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இத்தகைய உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் இணைப்புத் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அமைச்சர் சான் கூறினார்.
இணைப்புப் பள்ளிகளுடன் தொடர்பில்லாத மாணவர்களுக்கு இந்த உயர்நிலைப்பள்ளிகள் 20 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும்.
2021ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய உயர்நிலைப்பள்ளிகளில் இணைப்புத் தொடக்கப்பள்ளிகளுடன் தொடர்பில்லா மாணவர்களின் எண்ணிக்கை குறித்து திரு சுவா கேள்வி கேட்டிருந்தார்.
இந்த உயர்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து பயில ஏற்றுக்கொள்ளப்படும் இணைப்புப் பள்ளி மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் குறித்தும் திரு சுவா கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புள்ளிகள் வித்தியாசம் தொடர்பாகக் கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போது 27 உயர்நிலைப்பள்ளிகளுக்கு இணைப்புத் தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
2025ஆம் ஆண்டில் பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை 1ல் சேர்ந்து பயில இணைப்புப் பள்ளிகளுடன் தொடர்பில்லாத மாணவர்கள் 10 புள்ளிகள் அல்லது அதற்கும் குறைவாகப் பெற்றிருக்க வேண்டும்.
இணைப்புத் தொடக்கப்பள்ளிகளுடன் தொடர்புடைய மாணவர்கள் 20 புள்ளிகள் அல்லது அதற்கும் குறைவாகப் பெற்றிருக்க வேண்டும்.
செயிண்ட் ஜோசஃப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை 1ஆம் வகுப்பில் சேர்ந்து பயில இணைப்புத் தொடக்கப்பள்ளிகளுக்கு 12 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் தேவைப்பட்டன.
இணைப்புத் தொடக்கப்பள்ளிகளுடன் தொடர்பில்லாத மாணவர்களுக்கு 8 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் தேவைப்பட்டன.

