நீ சூன் குழுத்தொகுதியில் ஒன்றுபட்ட சிவப்புள்ளிக் கட்சிக்கு எதிரான போட்டியில் மக்கள் செயல் கட்சி 102,744 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தலைமையிலான அணி 73.81 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் ரவி ஃபிலமன் வழிநடத்திய அணி வாக்கு எண்ணிக்கையில் 26.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
நீ சூன் குழுத்தொகுதியை இந்தத் தேர்தலிலும் தொடர்ந்து வழிநடத்தினார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். 2011ல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் நீ சூன் குழுத்தொகுதி, மக்கள் செயல் கட்சியின் அரணாகத் திகழ்ந்து வருகிறது.
மக்கள் தரும் நம்பிக்கைக்கு உரிய கைம்மாறு தரப்படுவதை உறுதி செய்ய தங்களால் ஆன அனைத்தையும் செய்யப்போவதாகத் திரு சண்முகம், இயோ சூ காங் விளையாட்டரங்கில் தமது வெற்றி உரையின்போது கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார்.
“நேரடியாக மக்களைச் சந்திப்போம். குடியிருப்பாளர்களை முதன்மைப்படுத்துவோம். உங்களுடன் இத்தனை ஆண்டுகளாக எப்படி உங்களுக்காகப் பணியாற்றினோமோ அப்படியே தொடர்ந்து செய்வோம். என்னைத் தவிர, இது புதிய அணி. ஆனால் பண்புகளும் கொள்கைகளும் அதே மாதிரி உள்ளன,” என்று திரு சண்முகம் கூறினார்.
நீ சூன் குழுத்தொகுதியின் முன்னைய அணியிலிருந்து ஓய்வு பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி நவின்ற திரு சண்முகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் ஆற்றிய கடும்பணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் புகழ்ந்தார்.
அமோகமாக ஆதரவுக்கு நன்றி எனத் தமிழில் கூறிய திரு சண்முகம், “உங்கள் வாழ்க்கை மேம்படுத்துவதற்குப் பல திட்டங்கள் உள்ளன. எல்லாவற்றையும் நடத்துவோம்,” என்றும் உறுதியளித்தார்.
இந்தத் தொகுதியில் கடந்த தேர்தல்களில் நீ சூன் மசெக அணி, பாட்டாளிக் கட்சியையும் பின்னர் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியையும் வீழ்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷி, தெமாசெக் அறக்கட்டளையின் இயக்குநர் லீ ஹுவேய் யிங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் இயக்குநர் கோ ஹன்யான், முன்னாள் சொங் பாங் கிளைச் செயலாளர் ஜெக்சன் லாம் ஆகிய புதுமுகங்கள் நால்வர் அக்குழுத்தொகுதியில் களமிறங்கினர்.