வரும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, நான்கு புதுமுகங்களைக் களமிறக்குகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷி, தெமாசெக் அறக்கட்டளையின் இயக்குநர் லீ ஹுவேய் யிங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் இயக்குநர் கோ ஹன்யான், முன்னாள் சொங் பாங் கிளைச் செயலாளர் ஜாக்சன் லாம் ஆகிய நால்வர் அக்குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ளனர்.
நீ சூன் குழுத்தொகுதியை தொடர்ந்து வழிநடத்தவுள்ளார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.
“புதுமுகங்கள் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ளனர். வருங்கால அரசாங்கத்தை வழிநடத்தும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கிறது,” என்று குழுத்தொகுதியின் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பற்றிக் கேட்டபோது திரு சண்முகம் பதிலளித்தார்.
“வேட்பாளர்களின் திறன், தகுதிகளைப் பார்க்கும்போது மக்கள் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பர் என்று நம்பிக்கையுடன் கூறலாம்,” என்றார் திரு சண்முகம்.
மனநல ஆலோசகராகப் பணிபுரியும் திரு சையது ஹருன் அல்ஹப்ஷி ஹருன் குடியிருப்பாளர்கள், சமூகம், நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குவதாகக் குறிப்பிட்டார்.
“சேவை செய்வது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்,” என்றார் திரு ஹருன்.
மேலும், மலாய் முஸ்லிம் சமூகத்தில் தமது இடைவிடாத பங்களிப்பு, நீ சூன் அணியை மேலும் சிறப்பிக்கிறது என்று தெரிவித்தார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்குத் மூத்த அரசாங்க ஊழியராக அண்மையில் தலைமை தாங்கினார் திருவாட்டி கோ ஹன்யான்.
“சிங்கப்பூர் எதிர்நோக்கும் மாற்றங்களுக்கு எனது அனுபவத்தால் தக்க தீர்வுகள் அளிக்க உதவிக்கரமாக இருப்பேன்,” என்றார் அவர்.
திருவாட்டி கோ, டாக்டர் ஹருன் மீது தமக்கு ‘அதிக நம்பிக்கை’ இருப்பதாகத் திரு. சண்முகம் குறிப்பிட்டார்.
நீ சூன் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த திருவாட்டி லீ ஹுவேய் யிங் கடந்த 15 ஆண்டுகள் குழுத்தொகுதியில் தொண்டூழியராக இருந்து வருகிறார்.
தொண்டூழியம் தம் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தந்திருப்பதாகவும் தொடர்ந்து நீ சூன் மக்களுக்கு தான் சேவையாற்ற கடமைப்பட்டிருப்பதாகவும் திருவாட்டி லீ கூறினார்.
2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சொங் பாங் கிளைச் செயலாளராக சேவையாற்றினார் திரு ஜாக்சன் லாம்.
வெவ்வேறு சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட அனுபவமுள்ள திரு லாம் குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாகச் செயல்பட இயலும் என்று திரு சண்முகம் கூறினார்.
“ஈசூன் வட்டாரத்தில் ஆழமான உறவுகளை வளர்த்துள்ளார் திரு லாம்,” என்று செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
கடந்த தேர்தலில் உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், திரு லூயிஸ் இங், திரு டெரிக் கோ, திருவாட்டி கேரி டான் ஆகியோர் திரு சண்முகத்துடன் மசெக வேட்பாளர்களாக நீ சூன் வட்டாரத்தில் களமிறங்கினார்கள்.
இத்தேர்தலில் திரு ஃபைஷால் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏப்ரல் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
நீ சூன் வட்டாரத்தின் மலாய் முஸ்லிம் சமூகத்துடன் நல்ல உறுதியான உறவுகளையும் நீ சூனில் ஒரு வலுவான அணியையும் திரு ஃபைஷால் விட்டுச்சென்றுள்ளதாகத் திரு ஹருன் பாராட்டினார்.
நீ சூன் குழுத் தொகுதியில் மசெக அணியை எதிர்த்து ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி போட்டியிடவுள்ளது.
அக்குழுத்தொகுதியில் 151,634 வாக்காளர்கள் உள்ளனர். இது கடந்த தேர்தலைவிட 4,600 அதிகம்.