முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் கிட்டத்தட்ட 2000 நீசூன் வட்டார குடியிருப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) மாலை ஒன்றாக காத்திப் பன்முக விளையாட்டு அரங்கில் நோன்பு துறக்கக் கூடினர்.
மக்கள் கழகத்தின் மலாய் நற்பணிப் பேரவை, M3@Nee Soon அமைப்பு, இந்திய முஸ்லிம் சமூக சேவைச் சங்கமும் (IMSSA) இணைந்து இந்த நோன்புத் துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
நிகழ்ச்சியில் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு கா.சண்முகம், திரு சையது ஹருன் அல்ஹப்ஷி, திருவாட்டி லீ ஹுய் யிங், திரு ஜாக்சன் லாம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார்.
சமீபத்தில், குர்ஆன் மறைநூலை மிதிப்பதுபோன்ற காணொளி பற்றி பேசிய திரு சண்முகம், இதுபோன்ற தகாத செயலிகளுக்கு சிங்கப்பூரில் இடமில்லை என்று திடமாகக் கூறினார்.
“அந்த காணொளி மிகவும் புண்படுத்தும் வகையில் இருந்தது என்பதை பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள்,” என்றார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமும் கலந்துகொண்டு அவரது கருத்துகளை பகிர்ந்தார்.
“இதுபோன்ற செயல்கள் நமது பல்லின, மத சமூகத்தில் கடுமையாக உழைத்து உருவாக்கிய நம்பிக்கையை சிதைக்கின்றன,” என்று அச்செயலை கண்டித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பல்லின சமூக உணர்வுக்கு ஏற்ப ஏறத்தாழ 150 வசதி குறைந்த குடும்பங்களுக்கு $50 மதிப்புடைய அன்பளிப்பு நிதியுடன் ‘பாஜு குருங்’ ‘ஜுபா’ போன்ற பாரம்பரிய உடைகள் நன்கொடையாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டன.
எப்போதும் வீட்டிலேயே நோன்புத் துறக்கும் பழக்கம் கொண்ட அப்துல் சமர் அப்துல்லா - சுல்ஃபியா பரிவீன் தம்பதியர், மற்ற பல குடியிருப்பாளர்களுடன் அமர்ந்து நோன்புத் துறப்பது மிகவும் வித்தியாசமான உணர்வு என்று தமிழ் முரசுடன் பகிர்ந்தனர்.
“வெவ்வேறு மக்களுடன் அமர்ந்திருப்பதன் மூலம், நோன்பு மேற்கொள்வதன் உண்மையான சாராம்சத்தை அவர்களுக்குக் நாம் காட்ட முடிகிறது,” என்றார் திரு அப்துல்லா, 45. “இது பல்லின மக்களுக்கு இடையே அதிக புரிதலையும் மரியாதையையும் உருவாக்குகிறது,” என்றார் திருவாட்டி சுல்ஃபியா, 36.

