குடியிருப்பாளர் ஆதரவை வலுப்படுத்த நீ சூன் எம்.பி.க்கள் கடப்பாடு: சண்முகம்

1 mins read
1fee405e-76b8-4123-bcca-9fd0e9bb312b
‘மை நீ சூன்’ (My Nee Soon) தொடக்க நிகழ்வில் குடியிருப்பாளர்களுடன் குழுத்தொகுதி எம்.பி.க்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாழ்க்கைச் செலவினம் உயர்வது என்பது பலரது கவலை. நீ சூன் குழுத்தொகுதி குடியிருப்பாளர்கள் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் அந்தத் தொகுதியின் எம்.பி.க்கள் குடியிருப்பாளர்களுக்கான உதவியை அதிகரிக்கக் கடப்பாடு கொண்டுள்ளார்கள்.

உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீ சூன் குழுத்தொகுதியில் அங்கம் வகிக்கும் சொங் பாங் தொகுதியின் எம்.பி.யான அவர், “அரசாங்க உதவித் திட்டங்களுடன் ‘நீ சூன் கேர்ஸ்’ பற்றுச்சீட்டுத் திட்டம் மூலம் நீ சூன் குடியிருப்பாளர்களுக்கான ஆதவை வலுப்படுத்தி உள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குழுத்தொகுதியில் உள்ள, தகுதியுள்ள குடும்பங்களுக்கு கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டை அந்தத் திட்டம் வழங்குகிறது. அரசாங்கம் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்கெனவே வழங்கி வரும் சிடிசி பற்றுச்சீட்டுடன் அத்தொகுதியில் ‘நீ சூன் கேர்ஸ்’ பற்றுச்சீட்டு கூடுதலாக வழங்கப்படுகிறது.

‘மை நீ சூன்’ (My Nee Soon) என்னும் கேளிக்கை மற்றும் கண்காட்சித் தொடரின் தொடக்க நிகழ்வையொட்டி நீ சூன் நகரமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொகுதியின் உணவு விநியோகத் திட்டம் மற்றும் மூத்தோர் பராமரிப்பு டயப்பர் (diaper) திட்டத்திற்கு, தகுதியுள்ள குடியிருப்பாளர்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

நிகழ்வில் தொடக்க உரையாற்றிய திரு சண்முகம், தொகுதியின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்