அனைத்துலகச் சூழலின் தாக்கம், தேசிய அளவிலும் வட்டார அளவிலும் மக்களிடையே நிலவும் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.
சொங்ஃபூ பள்ளியில் புதன்கிழமை (ஏப்ரல் 23) நீ சூன் குழுத்தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நான்கு புதுமுக வேட்பாளர்களான லீ ஹுவி யிங், கோ ஹன்யான், சையது ஹருன் அல்ஹப்ஷி, ஜாக்சன் லாம் ஆகியோருடன் மக்கள் செயல் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள அமைச்சர் சண்முகம், “தேர்தல் வரும்போது மட்டும் மக்களைச் சந்திக்காமல், தொடர்ந்து அவர்களைக் கண்டு வருகிறோம். மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்தால்தான் அவர்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் பெறமுடியும். கடந்த 30 ஆண்டுகளாக அவ்வாறே உழைக்கிறேன்,” என்றார்.
“உலகப் பொருளியல் சூழல் தங்களது வாழ்வில், பணி நிலைத்தன்மையில், வேலை வாய்ப்புகளில் தாக்கம் செலுத்துமா எனும் கேள்வி மக்களிடையே நிலவுகிறது. அமெரிக்காவில் தொடங்கிய இந்நிலை உலகெங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனை எதிர்கொள்ள உரிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்,” என்றார் திரு சண்முகம்.
தொடர்ந்து வழங்கப்படவுள்ள பற்றுச்சீட்டுகள், பல்வேறு திட்டங்கள்மூலம் இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அரசாங்கம் துணைநிற்கும் என்று மக்களிடம் எடுத்துக் கூறவுள்ளதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே முதலில் புதுமுகங்களாக இருந்தவர்கள்தான் எனக் குறிப்பிட்ட அவர், “ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு புதிய வேட்பாளர்களுக்கும் மக்களிடயே நல்ல வரவேற்பு உள்ளது. வெற்றி வாய்ப்பை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.
மசெகவின் நான்கு புதுமுக வேட்பாளர்களும் நீ சூன் குழுத்தொகுதியில் பணியாற்ற ஆவலுடன் உள்ளதாகக் குறிப்பிட்டனர்.
வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து நீ சூன் பகுதியில் மசெக வேட்பாளர் குழு தொகுதிஉலா மேற்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் குழுத்தொகுதியில் மசெக அணியினரை எதிர்த்து ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி அணி தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமன் தலைமையில் டாக்டர் ஃபூ, 60, டாக்டர் சையத் ஆல்வி அஹமத், 57, திரு பாங் ஹெங் சுவான், 56, திருவாட்டி ஷேரன் லின், 40, ஆகியோர் அங்குக் களம் காண்கின்றனர்.
“மக்களிடையே பணப்பிரச்சினை நிலவுகிறது. அதனைச் சமாளிக்க பொருள், சேவை வரிக் குறைப்பை வலியுறுத்திப் பேசவுள்ளோம். வீடுகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து 99 ஆண்டுகளில் பூஜ்ஜியமாகிவிடுமோ எனும் கவலை இருக்கிறது. வேலை வாய்ப்புகளுக்காகச் சிங்கப்பூரர் அல்லாதோருடன் நியாயமற்ற போட்டி நிலவுகிறது. சிங்கப்பூரர்களுக்கு இங்கேயே இரண்டாம்தரக் குடிமக்கள் போன்ற உணர்வு உள்ளது. அதனைப் போக்க வேண்டும்,” என்று சொங்ஃபூ பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரவி ஃபிலமன் கூறினார்.
மக்களிடையே ஆதரவு இருப்பதால்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ததாகவும் தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மசெகவுக்கு எதிராக இதே தொகுதியில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்தத் தேர்தலில் மசெக அணி 61.9 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.
மூன்றாவது பெரிய தொகுதியான, ஐந்து உறுப்பினர் கொண்ட நீ சூன் குழுத்தொகுதியில் 151,634 வாக்காளர்கள் உள்ளனர்.