‘நாம்’ என்ற உணர்வைப் பறைசாற்றவேண்டும்: அதிபர் தர்மன்

3 mins read
39e4ae5e-cf98-45d6-8244-1904e44d13c0
அதிபர் தர்மன் சண்முகரத்னம் 15வது நாடாளுமன்றத்தின் தொடக்க நாளில் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, உலக அரங்கில் அதன் இடத்தைத் தக்கவைப்பது ஆகிய இரண்டு அம்சங்களுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

வட்டார ரீதியிலும் அனைத்துலக அளவிலும் பதற்றங்கள் தலைதூக்கும் இந்த நேரத்தில் நமக்கிருக்கும் பாதுகாப்பை மெத்தனமாகக் கருதிவிடக்கூடாது என்று அதிபர் எச்சரித்தார்.

இவ்வாண்டு மே மாதம் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலுக்குப்பின் முதல்முறையாக நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) ஒன்றுகூடியது. அதில் அதிபர் தர்மன் உரையாற்றினார்.

சிங்கப்பூரில் உள்ளோரின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டினர் சமூக ஊடகங்கள் தொடங்கி பாரம்பரியத் தளங்கள் வரை பலவற்றையும் பயன்படுத்தக்கூடும். போலித் தகவல்களைப் பரப்பி, பிரிவினைவாதத்தை விதைத்து, சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த அவர்கள் முற்படலாம். அசலைப் போலியிலிருந்து பிரித்துப்பார்க்கும் திறனை சிங்கப்பூரர்களிடையே உருவாக்கவேண்டும்.

அதேவேளை, பயங்கரவாதம், மோசடிகள், எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் என வெவ்வேறு வடிவங்களில் வரும் போதைப் பொருள்கள் போன்ற உள்ளூர் அபாயங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.

இவை வெறும் சட்டத்துக்குப் புறம்பான விவகாரங்கள் மட்டுமல்ல. சிங்கப்பூர்ச் சமூகத்தின் நல்லிணக்கம், நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றையும் இவை சிதைக்கின்றன என்றார் அவர்.

மாறிவரும் உலகச் சூழல், அனைத்துலக ஒழுங்கைவிட்டு விலகும் அமெரிக்கா, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூசல், வலுவிழந்த அனைத்துலக உறவுகள் எனப் பல விவகாரங்களைத் திரு தர்மன் தமது உரையில் மேற்கோள்காட்டினார்.

நிச்சயமற்ற சூழலில் உறுதியான உத்தரவாதத்தைத் தருவதற்காக அறிமுகமான புதிய திட்டங்களையும் திரு தர்மன் சுட்டினார். வேலைகளை இழந்தோருக்கான வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டம், பணியிடை மாற்றம் செய்த ஊழியர்கள் மேம்பட உதவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய சிலவற்றை அவர் குறிப்பிட்டார்.

முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டம் வெவ்வேறு படிநிலைகளில் சிங்கப்பூரர்களுக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்துவதாக அதிபர் சொன்னார்.

“இளையர்களை எதிர்காலத்துக்கு ஆயத்தப்படுத்துவோம். வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யவும் பதற்றத்தைத் தணிக்கவும் மாறும் உலகிற்கு ஏற்ற திறன்களை வளர்க்கவும் அவர்களுக்கு உதவுவோம்,” என்றார் அவர்.

குடும்பங்களைக் குறிப்பிட்டு உரையாற்றிய திரு தர்மன், வீடுகள் கட்டுப்படியான விலையில் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றார். சிறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் கட்டுப்படியான, தரமான பிள்ளைப் பருவச் சேவைகளை எளிதில் பெற வழியமைக்கப்படும். பராமரிப்பாளர்களுக்கான ஆதரவும் மேம்படுத்தப்படும் என்றார் திரு தர்மன்.

மூத்தோர் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கான இடமாகவும் சிங்கப்பூர் திகழும். வேலை செய்ய விரும்புவோரை ஊக்குவிப்போம். மூத்தோருக்கான ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டம், ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ திட்டம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலகப் பூசல், புதிய வரி விதிப்பு, விநியோகத் தொடரில் ஏற்பட்ட இடையூறு போன்றவற்றால் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் போன்ற நெருக்கடிகளை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும் திரு தர்மன் சொன்னார்.

எனவேதான் அரசாங்கம் அந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தொடர்ந்து கைகொடுத்து குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கான அத்தியாவசியத் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிசெய்யும் என்றார் அவர்.

சிங்கப்பூர் ‘நான்’ என்பதற்குப் பதிலாக ‘நாம்’ என்ற உணர்வுடன் செயல்படவேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார். வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதன் மூலம் சிங்கப்பூரின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்றார் திரு தர்மன்.

அதிபர் உரைக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அவர்களில் 87 பேர் ஆளும் மக்கள் செயல் கட்சியையும் எஞ்சிய 12 பேர் பாட்டாளிக் கட்சியையும் சேர்ந்தவர்கள்.

கலாசார, சமூக, இளையர் துறை, மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ், வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் ஆகிய மூவரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்