மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தங்கள் தொகுதியைச் சேர்ந்த மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சனிக்கிழமை (மார்ச் 15) தெரிவித்துள்ளார்.
அதனால் மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு வரும் மற்ற தொகுதி குடியிருப்பாளர்கள் அவற்றைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு வரும் தொகுதி குடியிருப்பாளர்கள் தங்களது முக்கியமான பிரச்சினைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடி வருகின்றனர் என்று அமைச்சர் மசகோஸ் நினைவூட்டினார்.
ஏற்கெனவே, பல பிரச்சினைகளை எதிர்கொண்டு உதவிக்கேட்டு அவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை (மார்ச் 12), மக்கள் செயல் கட்சி சொங் பாங் கிளைக்கு வெளியே நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகத்தைப் பெண்கள் இருவர் இடைமறித்துத் தகராறு செய்தனர்.
தெம்பனிஸ் வட்டாரத்தில் நடந்த எஸ்ஜி60 கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மசகோஸ் கலந்துகொண்டபோது அந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குக் கருத்துரைத்த அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பொதுவாக மக்கள் சந்திப்புக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் நடக்கும். அப்போது அந்தத் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளைக் கேட்டுத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்.
கடந்த சில மாதங்களாக 10க்கும் மேற்பட்ட மக்கள் செயல் கட்சியின் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் ‘மண்டே ஆஃப் பாலஸ்தீன் சோலிடெரிட்டி’ (Monday of Palestine Solidarity) என்ற ஆர்வலர் குழுவைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டு பிரச்சினை செய்து வருவதாக மசெக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.