சிங்கப்பூரில் கவனமின்றி கனரக வாகனங்களை ஓட்டிய ஐந்து ஓட்டுநர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐந்து வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய அந்த ஓட்டுநர்கள் 28க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதினர்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ், புதன்கிழமை (பிப்ரவரி 11) அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தண்டனையை எதிர்நோக்கும் ஐந்து ஓட்டுநர்களில் நால்வர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்.
செல்வம் மணிராஜ், 30, முருகையன் இளவரசன், 34, அன்பழகன் ராஜ்குமார், 42, பட்டப்பன் மூவேந்திரன், 50, ஆகியோர் அந்த நால்வர்.
ஐந்தாமவர் மியன்மாரைச் சேர்ந்த சாய் ஸேய் யேர் டுன், 28.
செல்வம், கடந்த ஜனவரி 7ஆம் தேதி துவாஸ் சவுத் பொலிவர்டை நோக்கி பாரமிழுக்கும் லாரியை ஓட்டிச் சென்றபோது வலதுபக்கம் அதனைத் திருப்பினார். ஆனால், அந்த லாரி இடப்புறம் கவிழ்ந்தது. அதன் காரணமாக சாலையின் மூன்று தடங்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்கு மூடப்பட்டன.
2025 டிசம்பர் 13ஆம் தேதி குல் ஸ்திரீட் 3ஐ நோக்கி துவாஸ் ரோட்டில் முருகையன் ஓட்டிச் சென்ற லாரி, இடது புறம் இழுத்துச் சென்று வலது புறம் கவிழ்ந்தது. சாலைத் தடுப்பில் மோதியதால் அருகிலிருந்த விளக்குக் கம்பம் அடியோடு சாய்ந்தது. அது $1,700 என காவல்துறை மதிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சம்பவத்துக்கு முதல் நாளான 2025 டிசம்பர் 12 அன்று ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் அன்பழகன் ஓட்டிச் சென்ற எண்ணெய் லாரி வலது திருப்பத்தில் சென்றபோது அதன் முன், பின் சக்கரங்கள் கால்வாயில் இறங்கின. பின்னர், பாரந்தூக்கி மூலம் கால்வாயிலிருந்து அந்த லாரி தூக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் சாலை ஓரத்தடுப்பு மற்றும் சாலை நடுவே உள்ள கம்பித் தடுப்பிற்கு $6,300 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டது.
அதற்கு முன்னர், 2025 டிசம்பர் 8ஆம் தேதி பட்டப்பன் ஓட்டிச் சென்ற மணல் அள்ளும் லாரி துவாஸ் சவுத் அவென்யூ 4ல் உள்ள வலப்புறத் திருப்பத்தில் கவிழ்ந்தது. அதனால், சாலையில் எண்ணெய் சிதறி, மூன்று தடங்களில் இரண்டு, 10 மணி நேரத்திற்கு மூடப்பட்டன.
மியன்மாரைச் சேர்ந்த சாய் ஸேய், 2025 டிசம்பர் 7ஆம் தேதி சிலேத்தார் லிங்கில் ஓட்டிச் சென்ற லாரி வலப்புறத் திருப்பத்தில் கவிழ்ந்தது. அதன் காரணமாக, சாலையிலும் அருகிலிருந்த புல் தரையிலும் மணல் கொட்டியதால் ஏறத்தாழ ஆறரை மணி நேரத்தில் அந்தச் சாலை மூடப்பட்டது.
முருகையன் தொடர்புடைய வழக்கு பிப்ரவரி 24ஆம் தேதியும் மற்ற நால்வர் சம்பந்தப்பட்ட வழக்கு மார்ச் மாதமும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
உரிய கவனமின்றியும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனை, அதிகபட்சம் $1,500 அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். வாகனம் ஓட்டும் தகுதியையும் அவர்கள் இழக்கக்கூடும்.

