நம்பிக்கையற்ற நிலையிலும் இஸ்ரேலுடன் மீண்டும் பேசப்படும்: சிரியா

நம்பிக்கையற்ற நிலையிலும் இஸ்ரேலுடன் மீண்டும் பேசப்படும்: சிரியா

2 mins read
054e796b-18f3-43d9-97e8-7ea66a8d2ac3
சிரிய வெளியுறவு அமைச்சர் ஆசாத் அல்-ஷைபானி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டமாஸ்கஸ்: சிரியாவின் நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை விரைவில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சிரியாவின் உயர்மட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசதந்திரத்திற்கான கதவுகள் திறந்திருப்பதால், இந்த வரலாற்று வாய்ப்பை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிரியாவின் விமானத் தளத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசிய சில நாள்களுக்குப் பிறகு சிரிய வெளியுறவு அமைச்சர் ஆசாத் அல்-ஷைபானி டமாஸ்கஸில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

இஸ்ரேலியத் தாக்குதல்களை நிறுத்துவதே டமாஸ்கஸின் முன்னுரிமை என்றும் இதற்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் புதிய கூட்டாளியான சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா தலைமையிலான அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வாஷிங்டன் முயன்று வருகிறது.

இருப்பினும், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இஸ்ரேல் சிரிய எல்லைக்குள் படைகளை அனுப்பியும் அரசு சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியும் வருவதால் அந்த ஒப்பந்தம் தாமதமாகி வருகிறது.

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாகவும் ஆனால் அவை மீண்டும் தொடங்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் திரு ஷைபானி கூறினார்.

விமானத் தளத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது இஸ்ரேலை சிரியா நம்பவில்லை என்று தெரிவித்தார்.

அவரது அந்தக் கருத்து தொடர்பாகப் பதிலளிக்க இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

14 ஆண்டுகாலப் போருக்குப் பிறகு நாட்டை மறுசீரமைப்பதில் டமாஸ்கஸ் கவனம் செலுத்தி வருவதால், சிரியா மற்ற நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று சிரிய அதிபர் ஷாரா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்