சிங்கப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில், வீடுகளில் பொருள்களைச் சேர்த்து வைத்துப் பேரளவில் குவித்து வைப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அண்டை வீட்டார் இடையிலான பூசல்களைத் தீர்க்கும் சிறப்புப் பிரிவான சமூக உறவுப் பிரிவின் சேவையை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்துவது இத்தகைய பிரச்சினைகளை இன்னும் சிறப்பாகக் கையாள உதவும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.
பொருள்களைப் பேரளவில் குவித்து வைப்பது மற்றும் அண்டை வீட்டார் பூசல் விவகாரங்களைக் கையாளும் சமூக உறவுகள் பிரிவு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெம்பனிசில் ஓராண்டு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
இறுதி நடவடிக்கையாக, அத்தகைய குடியிருப்பு வீடுகளுக்குள் இருக்கும் தேவையற்ற பொருள்களைப் பலவந்தமாக அப்புறப்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்தின் இந்தப் பிரிவு கொண்டுள்ளது.
பொருள்களைப் பேரளவில் குவித்து வைக்கும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இப்பிரிவு அமைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 253ஆக இருந்த இத்தகைய பிரச்சினைகள், 2025ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 450ஆக உயர்ந்துள்ளது.
இவற்றை அமைப்புகளுக்கிடையிலான பொருள்களைப் பேரளவில் குவித்து வைக்கும் விவகாரத்துக்கான மேலாண்மை முதன்மைக் குழு மற்றும் புதிய சுற்றுப்புற செயல் குழு ஆகியவை கையாண்டு வருகின்றன.
பல்வேறு அரசாங்க அமைப்புகள், சமூக அமைப்புகள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 28 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமான முதல் ஆறு மாதங்களில் பொருள்களைப் பேரளவில் குவித்து வைப்பது தொடர்பான 308 சம்பவங்களில் பொருள்களை அப்புறப்படுத்த உதவியுள்ளது.
எனினும், இத்தகைய பழக்கம் உள்ளவர்கள் உதவியை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது என்றும் வீடுகளைச் சுத்தம் செய்ய அவர்களின் நம்பிக்கையைப் பெற பல மாதங்கள் பிடிக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
வாம்போ டிரைவ் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்டிய ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ, வீட்டில் கசிவு மற்றும் துர்நாற்றம் காரணமாகப் பல தொண்டூழியர்களையும் ஒரு பௌத்தத் துறவியையும் அழைத்து வந்தே அந்தப் பெண்மணியைச் சம்மதிக்க வைக்க முடிந்ததாகத் தெரிவித்தார்.
அந்த வீடு 2025ஆம் ஆண்டு மே மாதம் சுத்தம் செய்யப்பட்டது. வீட்டில் பொருள்களைப் பேரளவில் குவிப்பவர்கள் அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பதில்லை என்பதால், அவர்களிடம் பரிவோடு எடுத்துரைக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.


