தீபாவளிக்குத் தம் தோழி விஜயலக்ஷ்மியுடன் இணைந்து முறுக்கு சுட்டார் ஜெஸ்ஸி [Ϟ]ஹியா.
முறுக்கு மாவைப் பிசைந்து, அச்சில் போட்டு எண்ணெய்யில் வட்ட வட்டமாகப் பிழிந்து 64 வயது ஜெஸ்ஸி முறுக்கு சுடும் காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது.
ஜெஸ்ஸிக்கு இந்திய உணவுகள் என்றால் கொள்ளைப் பிரியம். உணவுதான் இருவரையும் இணைத்தது என்ற 48 வயது விஜயலக்ஷ்மி, இந்த நட்பு மூலம் ஜெஸ்ஸி இந்தியப் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்துவிட்டதாகக் கூறினார்.
ஹவ்காங்கில் உள்ள தமது நாலறை வீட்டில் தீபாவளிக்கு ஏற்பாடுகளைச் செய்து வந்த விஜயலக்ஷ்மிக்கு, ஜெஸ்ஸியின் கைகளும் உதவிக்கு வந்தன.
மூவாண்டுகளுக்கு முன்னர் சமூக மன்ற யோகா வகுப்பில் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். தோழிகள் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வது அவரவரின் பண்பாடுகள் பற்றித்தான்.
இருவரதும் நட்பு சென்ற ஆண்டு பாம் வியூ வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இன்னும் ஆழமானது.
பாம் வியூ வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பில் தொண்டூழியரான ஜெஸ்ஸி, தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு விஜய[Ϟ]லக்ஷ்மியை அழைத்தார்.
“ஜெஸ்ஸி அப்போது என்னிடம் அவருக்கு சேலை கட்டிவிட வேண்டுமென்று கேட்டார். அவர் சேலையில் மிக அழகாகத் தோற்றமளித்ததோடு அதை நீண்ட நேரம் அணிந்திருந்தார்,” என்று நினைவுகூர்ந்தார் விஜயலக்ஷ்மி. இருவரும் அந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு சேலை அணிந்து சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“சேலை மிகவும் எழிலானது. இந்தியப் பண்பாடு வண்ணமயமானது,” என்று புன்முறுவலுடன் சொன்னார் ஜெஸ்ஸி.
விஜயலக்ஷ்மியின் பக்கத்து புளோக்கில்தான் ஜெஸ்ஸி வசிக்கிறார். வாரம் இருமுறையாவது விஜயலக்ஷ்மியைச் சந்திக்கும் ஜெஸ்ஸி, தமக்குப் பிடித்த பிரியாணி சமைப்பதற்குக் கற்றுக்கொண்டுள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து[Ϟ]கொள்கின்றனர்.
“சில இந்திய உணவுவகைகள் காரமாக இருந்தாலும் எனக்கு அதில் உள்ள நறுமணப்பொருள்கள் மிகவும் பிடிக்கும்,” என்று கூறினார் ஜெஸ்ஸி.
ஜெஸ்ஸியிடமிருந்து சீன உணவான ‘எள்ளெண்ணய்க் கோழி’ செய்யக் கற்றுக்கொண்ட விஜயலக்ஷ்மி, ஜெஸ்ஸி தமக்குச் சீன உணவுவகைகளைச் சமைத்துத் தந்துள்ளார்.
இரு மகன்களுக்குத் தாயான விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினர், ஜெஸ்ஸியுடனான நட்பைப் பெரிதும் ஆதரிக்கின்றனர்.
“என் குடும்ப உறுப்பினர்களை விஜயலக்ஷ்மியின் வீட்டிற்கு அழைத்து வர விரும்புகிறேன். எங்களது நட்பு சிங்கப்பூரின் கம்பத்து உணர்வை வெளிப்படுத்துகிறது,” என்றார் ஜெஸ்ஸி.
பல இனப் பண்பாடுகள் ஒன்றுகலக்கும் சிங்கப்பூரில் இந்த நட்புறவைப் பெருமிதத்துடன் போற்றிப் பேணுகிறார் விஜயலக்ஷ்மி.