நேப்பாள வெள்ள நிவாரணம்: $200,000 நிதி திரட்டிய சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம்

நேப்பாள வெள்ள நிவாரணம்: $200,000 நிதி திரட்டிய சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம்

1 mins read
928b5a5f-c384-4e98-a37d-625b765a838b
நேப்பாள-திபெத் எல்லையின் இருபுறமும் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் 1,429 பேர் உயிரிழந்தனர். மேலும் 5,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. - படம்: ஏஎஃப்பி

நேப்பாளத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், ரஹ்மத்தன் லில் ஆலமீன் அறநிறுவனம் மூலம் $200,000 நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிதி திரட்டு இயக்கத்தின் மூலம் திரட்டப்பட்ட தொகை, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான காசோலை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

தனிநபர்கள், வணிகங்கள், அமைப்புகளின் தாராள மனப்பான்மையும் மனிதநேயமும் ஆழ்ந்த நெகிழ்ச்சியைத் தருவதாக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அட்னான் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

நிதி திரட்டு இயக்கத்தின் தொடக்கத்தில் அறநிறுவனம் $50,000 நிதி வழங்கியிருந்தது. மேலும், உள்ளூர் இந்திய முஸ்லிம் அமைப்புகளும் பல்வேறு வணிக நிறுவனங்களும் இணைந்து $70,000க்கும் அதிகமான தொகையைத் திரட்டின.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், மக்கள் துன்பப்படும்போது இனம், சமய வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுபட்டு உதவுவது சிங்கப்பூர் சமூகத்தின் தனித்துவமான அடையாளம் என்று புகழாரம் சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்