‘சிம்பா’வின் தாய்நிறுவன நிகர லாபம் மும்மடங்கிற்குமேல் அதிகரிப்பு

‘சிம்பா’வின் தாய்நிறுவன நிகர லாபம் மும்மடங்கிற்குமேல் அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Sep 2026 - 6:35 pm

3 mins read

‘சிம்பா டெலிகாம்’ நிறுவனத்தின் தாய்நிறுவனமான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘துவாஸ் நிறுவனம்’ (Tuas), தனது முழு ஆண்டு நிகர லாபத்தில் மும்மடங்கிற்குமேல் வளர்ச்சி கண்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் கூடுதல் அம்சங்களைக் கொண்ட திட்டங்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்ததும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ஏறத்தாழ $26 மில்லியனாகப் பதிவானது. இது 2025ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட $6.9 மில்லியனைக் காட்டிலும் 277 விழுக்காடு அதிகம்.

நிறுவனத்தின் வருவாய் 24 விழுக்காடு உயர்ந்து $187.6 மில்லியனை எட்டியது. 2025ஆம் நிதியாண்டில் இதன் வருவாய் $151.3 மில்லியனாக இருந்தது.

நிறுவனப் பங்குகளின் அடிப்படை ஆதாயம் 1.48 காசிலிருந்து 4.78 காசாக உயர்ந்தது. அதேவேளையில், வட்டி, வரி, தேய்மானம், கடன் ஆகிய செலவுகளுக்கு முந்தைய அடிப்படை ஈட்டம் (EBITDA) 22 விழுக்காடு அதிகரித்து $83.8 மில்லியனாகப் பதிவானது.

கடந்த மே மாதம் கெப்பல் நிறுவனத்திடமிருந்து ‘எம்1’ நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அது தொடர்பான பரிசீலனை, தொழில்முறை ஆலோசனைகளுக்காகச் செலவிடப்பட்ட $3.7 மில்லியன் இதில் சேர்க்கப்படவில்லை.

ஒதுக்கீடு செய்யப்படாத அலைவரிசையை ‘சிம்பா’ நிறுவனம் தனது கைப்பேசிச் சேவைகளுக்குப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்றும் அது சிங்கப்பூரின் தொலைத்தொடர்புச் சட்டத்தை மீறும் செயல் என்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டது.

“நடப்பு நிதியாண்டில் ‘எம்1’ நிறுவனத்தைக் கையகப்படுத்துவற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ஒரு முக்கிய மைல்கல்லாகும்,” என்று புதன்கிழமை (செப்டம்பர் 23) பங்குச் சந்தை அறிக்கை ஒன்றில் ‘துவாஸ்’ நிறுவனத் தலைவர் டேவிட் தேவ் தெரிவித்தார்.

“அனுமதியின்றி அலைவரிசையைப் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்; அவர்களின் அதிகாரபூர்வ முடிவுக்காகக் காத்திருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

‘எம்1’ நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்காக ‘துவாஸ்’ நிர்வாகக் குழு, நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து $322 மில்லியனையும், தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து பங்குச் சலுகை மூலம் $42.5 மில்லியனையும் திரட்டியிருந்தது. தற்போது அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ள நிலையில், திரட்டப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

“இந்த அறிக்கை வெளியாகும் வரை, அலைவரிசை தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து ஆணையம் ‘சிம்பா’விடம் தெரிவிக்கவில்லை,” என்று ‘துவாஸ்’ கூறியது.

“அபராதம் விதிப்பது, சிங்கப்பூரில் ‘சிம்பா’ செயல்படுவதற்கான உரிமங்களில் மாற்றங்கள் செய்வது அல்லது உரிமத்தை ரத்து செய்வது, இதில் தொடர்புடைய நபர்கள்மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பது போன்றவை அந்த நடவடிக்கைகளில் அடங்கக்கூடும்,” என்றும் அது குறிப்பிடப்பட்டது.

சந்தையில் கடும் போட்டி நிலவியபோதிலும், 2025 நிதியாண்டின் இறுதியில் ஏறக்குறைய 1.3 மில்லியனாக இருந்த கைப்பேசிச் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2026 ஜூலை 31 நிலவரப்படி கிட்டத்தட்ட 1.5 மில்லியனாக உயர்ந்தது.

அதேபோல, அதன் ஃபைபர் விரிவலைச் (fibre broadband) சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் இறுதியில் 62,000ஐ எட்டியது.

கைப்பேசிச் சேவை பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி மொத்த வருவாய் $9.42 ஆக இருந்தது. ‘சிம்பா’வின் வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்து வருவதால் அதிகரித்து வரும் இணைப்பு வருவாய் இதில் சேர்க்கப்படவில்லை.

புதிய நிதியாண்டில், சிங்கப்பூர் ஒழுங்குமுறை அமைப்புகளால் அனைத்து முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு விதிகளைப் பூர்த்தி செய்ய, ‘சிம்பா’ $15 மில்லியன் முதல் $30 மில்லியன் வரை கூடுதல் மூலதன, செயல்பாட்டுச் செலவுகளை எதிர்கொள்ளும் என்று ‘துவாஸ்’ கணித்துள்ளது.

மேலும், புதிய நிதியாண்டில் சிங்கப்பூர்ச் சந்தைக்காகப் புதிய தயாரிப்புகளை ‘சிம்பா’ உருவாக்கி வருவதாகவும், அவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் திரு தேவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்துவாஸ்லாபம்வாடிக்கையாளர்