லீ குவான் இயூ நூற்றாண்டு விழா சிறப்பு நாணயம் வெளியீடு

1 mins read
5345e354-6d53-4218-af62-1481d7e3f367
நாணயத்தின் ஒருபக்கத்தில் அமரர் லீ குவான் இயூவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. படம்: சிங்கப்பூர் நாணய ஆணையம் -
multi-img1 of 3

மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ள புதிய பத்து வெள்ளி நாணயங்களைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொன்னிறத்தில் ஒளிரும் அந்நாணயம் அலுமினியத்தாலும் செம்பாலும் ஆனது; 30 மில்லிமீட்டர் விட்டம் கொண்டது.

நாணயத்தின் ஒருபக்கம் சிங்கப்பூரின் வானளாவிய கட்டடங்கள் பின்னணியில் இருக்க, அமரர் லீயின் முகத்தோற்றமும் மரினா அணைக்கட்டும் இடம்பெற்றுள்ளன.

மறுபக்கத்தில் 'கோட் ஆஃப் ஆர்ம்ஸ்' மரபுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒருகோணத்தில் இருந்து பார்த்தால் '1923' என்றும் இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் '2023' என்றும் தெரியுமாறு நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஐந்து நாணயங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். இன்று மே 15ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 9ஆம் தேதிவரை go.gov.sg/lky100coin-order என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே நாணயங்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர் தமது அடையாள அட்டை எண், கைப்பேசி எண், நாணயங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வங்கிக்கிளை ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் கிடைத்ததும் அதுகுறித்து குறுஞ்செய்திவழி தகவல் அனுப்பப்படும்.