தங்ளின் பகுதியில் 1,000 இருக்கைகள் கொண்ட புதிய நாடக அரங்கம் கட்டப்படும்

தங்ளின் பகுதியில் 1,000 இருக்கைகள் கொண்ட புதிய நாடக அரங்கம் கட்டப்படும்

4 mins read
2026 கலைப் புரவலர் விருது விழாவில் சாதனை அளவில் 585 தனிநபர்கள், நிறுவனங்கள் கௌரவிப்பு
c61b691c-84e7-4310-b3a0-0c00813541fe
கலைப் புரவலர் விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முன்னாள் தங்ளின் ஷாப்பிங் சென்டர் அமைந்திருந்த இடத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட புதிய நாடக அரங்கம் 2030க்குள் கட்டப்படவுள்ளது.

இவ்வாண்டின் கலைப் புரவலர் விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ இதை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவித்தார்.

“கலைகள் நமது தனித்துவமான சிங்கப்பூர் அடையாளத்தை வடிப்பதில் சக்திவாய்ந்த பங்கு வகிக்கின்றன. அவை நாம் யார் என்பதைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்றுபட்ட மக்களாக நாம் எப்படி உருவாகிறோம் என்பதையும் வடிவமைக்கின்றன,” என்று திரு நியோ குறிப்பிட்டார்.

கலைத்துறையின் மேம்பாட்டிற்காகத் தாராளமாகப் பங்களித்த சாதனை அளவிலான 585 தனிநபர்களும் நிறுவனங்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டன.

இவ்வாண்டு அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு 89.5 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் கொடையான 45 மில்லியன் வெள்ளியை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். அத்துடன் இது, கடந்த பத்தாண்டுகளில் பெறப்பட்ட நன்கொடைகளில் ஆகப்பெரிய தொகையாகும்.

கலைகளின் தாக்கத்தை நிலைநிறுத்தவும் ஆழமாக்கவும் அரசாங்கத்தின் ஆதரவு மட்டும் போதாது என்று குறிப்பிட்ட அமைச்சர் நியோ, அதற்கு ஒட்டுமொத்த தேசத்தின் கூட்டு ஆதரவு, குறிப்பாகக் கலைப் புரவலர்களின் உதவி தேவை என்று தெரிவித்தார்.

புதிய நாடக அரங்கின் உருவாக்கம், இந்தச் சாதனை அளவிலான நிதியுதவிகள் ஆகியவை சிங்கப்பூரின் கலைத்துறையை ஆதரிப்பதில் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்களின் வளர்ந்து வரும் பங்களிப்பைப் பிரதிபலிக்கின்றன.

கலைத்துறையின் புதிய உள்கட்டமைப்பு

சிங்கப்பூரின் கலைத் துறைத் தேவைகளை ஆதரிப்பதற்காக அரசாங்கம் கலாசாரப் பொருத்து நிதி, முக்கிய நிறுவனத் திட்டம் ஆகிய தளங்கள் வாயிலாகத் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகத் திரு நியோ குறிப்பிட்டார்.

கடந்த 2024ல் கட்டணம் செலுத்தப்பட்ட 7,100க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில், கலைக் குழுக்களுக்குத் தங்களின் படைப்புகளைப் பெரிய அளவில் வழங்குவதற்கான இடப்பற்றாக்குறை நிலவுவதை உணர்ந்து அரசாங்கம் புதிய இடவசதியை ஏற்படுத்தித் தருவதாக அவர் கூறினார்.

புதிய அதிநவீனப் பன்னோக்கு நாடக அரங்கம், ஆர்ச்சர்ட் சாலையின் நுழைவாயிலாக விளங்கும் தங்ளின் பகுதியில், எண் 19 தங்ளின் ரோடு முகவரியில் அமையவுள்ளது.

அனைத்துலக, உள்ளூர் தயாரிப்புகளுக்காக உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 1,000 இருக்கைகள் கொண்ட தங்ளின் நாடக அரங்கின் கலைஞர் சித்திரிப்பு.
அனைத்துலக, உள்ளூர் தயாரிப்புகளுக்காக உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 1,000 இருக்கைகள் கொண்ட தங்ளின் நாடக அரங்கின் கலைஞர் சித்திரிப்பு. - படம்: பசிபிக் ஈகிள் ரியல் எஸ்டேட்

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் பசிபிக் ஈகிள் ரியல் எஸ்டேட் (Pacific Eagle Real Estate) நிறுவனம், தனது மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரங்கையும் ஒரு சமகாலக் கலைக் காட்சியகத்தையும் (contemporary art museum) பொதுமக்களின் பயன்பாட்டுக்காகச் சிங்கப்பூருக்குக் கொடையாக வழங்குகிறது.

சிங்கப்பூரில் பழமையான கட்டடங்களை உத்திபூர்வமாக மறுமேம்பாடு செய்து கலைகளுக்கான புதிய இடங்களை உருவாக்கும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் உத்திபூர்வ மேம்பாட்டு ஊக்குவிப்புத் திட்டத்தின் (Strategic Development Incentive scheme) கீழ் இந்த இரு முக்கிய கலை இடங்களும் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பசிபிக் ஈகிள் ரியல் எஸ்டேட் நிறுவனம் கலைக் குழுக்களின் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில் தனது 20 ஆண்டுக்கால குத்தகை காலத்தில் அடிப்படை வாடகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நாடக அரங்கத்தை நிர்வகிப்பதற்கான தகுதியான அமைப்பைத் தேர்வு செய்ய தேசியக் கலை மன்றம் விரைவில் விருப்பக் கோரல் செயல்முறையைத் தொடங்கும் வேளையில், கலைக் காட்சியகத்தைத் டனோட்டோ கலை அறக்கட்டளை நிர்வகிக்கும்.

உயர்தர அலுவலகங்கள், சில்லறை வர்த்தகம், நாடக அரங்கம், சமகாலக் கலைக் காட்சியகம் உள்ளிட்ட கலாசார இடங்களைக் கொண்ட ஒரு முக்கியப் பல்நோக்கு இடமாகத் திகழவுள்ள மறுமேம்பாடு செய்யப்படும் தங்ளின் ஷாப்பிங் சென்டரின் நாடக அரங்கப் பகுதிக்கான கலைஞர் சித்திரிப்பு.
உயர்தர அலுவலகங்கள், சில்லறை வர்த்தகம், நாடக அரங்கம், சமகாலக் கலைக் காட்சியகம் உள்ளிட்ட கலாசார இடங்களைக் கொண்ட ஒரு முக்கியப் பல்நோக்கு இடமாகத் திகழவுள்ள மறுமேம்பாடு செய்யப்படும் தங்ளின் ஷாப்பிங் சென்டரின் நாடக அரங்கப் பகுதிக்கான கலைஞர் சித்திரிப்பு. - படம்: பசிபிக் ஈகிள் ரியல் எஸ்டேட்

விக்டோரியா அரங்கம் போன்ற சிறிய அரங்குகளுக்கும் எஸ்பிளனேட் போன்ற பெரிய அரங்குகளுக்கும் இடைப்பட்ட நடுத்தரத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்த அரங்கம் அமையும். 98,000 சதுர அடிப் பரப்பளவிலும் 1,000 இருக்கை வசதியுடனும் அமையும் இந்த அரங்கம், நடுத்தர அளவிலான கலைநிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான இடமாகத் திகழும்.

இந்த அரங்கம் உலகளாவிய அளவில் தொடர்புகொண்டதாகவும் அதே வேளையில் சிங்கப்பூரின் துடிப்பான கலைச் சூழலில் ஆழமாக வேரூன்றியதாகவும் விளங்கும் என்று அமைச்சர் நியோ நம்பிக்கை தெரிவித்தார்.

கலைத்துறைக்கு சாதனை அளவிலான பங்களிப்பு

கடந்த 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை கலை மேம்பாட்டிற்காக நிதி அளித்ததுடன் இதர சேவைகளை வழங்கிய புரவலர்கள் இவ்வாண்டு கௌரவிக்கப்பட்டனர்.

தனிநபர்களும் நிறுவனங்களும் அடங்கிய இவ்வாண்டின் சாதனை அளவிலான 585 விருதாளர்களில், 39 பேர் ‘மதிப்புக்குரிய கலைகளின் புரவலர்’ (Distinguished Patron of the Arts) விருதையும், 3 பேர் ‘மதிப்புக்குரிய கலை ஆதரவாளர்’ (Distinguished Supporter of the Arts) விருதையும், 66 பேர் ‘கலைகளின் புரவலர்’ (Patron of the Arts) விருதையும், 475 பேர் ‘கலைகளின் தோழர்’ (Friend of the Arts) விருதையும், 2 தனிநபர்கள் ‘கலை ஆதரவாளர்’ (Supporter of the Arts) விருதையும் பெற்றனர்.

இவ்வாண்டு தனிநபர் ஆதரவு புதிய உச்சம் தொட்டுள்ளதுடன் மொத்தம் 480 தனிநபர் புரவலர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் பங்களிப்பு மட்டும் ஏறத்தாழ $58 மில்லியனாகும்.

அதே வேளையில் 105 பெருநிறுவனங்கள் இணைந்து ரொக்கமாகவும் சேவைகள் மூலமாகவும் $31 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவை வழங்கியுள்ளன.

இவ்வாண்டின் ஒட்டுமொத்த நன்கொடைகளில் ரொக்கமாக 33.4 மில்லியன் வெள்ளியும் இதர பொருள் வடிவிலான ஆதரவாக 37.4 மில்லியன் வெள்ளியும் கலைப்படைப்புக் கடன்களாக 18.6 மில்லியன் வெள்ளியும் பெறப்பட்டுள்ளன.

கலைத் துறையில் நிலையான நிதி ஆதாரங்களை உருவாக்கவும் கொடையாளர்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கவும் தேசியக் கலை மன்றம் 2027ல் தனது முதலாவது சிங்கப்பூர் கலை அறப்பணி மன்றக் கலந்துரையாடலை (Singapore Arts Philanthropy Forum) நடத்தவுள்ளது.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, ‘தி ஹியூமன் எக்ஸ்பிரஷன்’ (T.H.E) நடனக் குழு அத்துடன் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வழங்கிய ‘பிட்வீன் வேர்ல்ட்ஸ்’ (Between worlds) என்னும் சிறப்பு கூட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்