சுவா சூ காங், இயூ டீ பகுதிகளில் வசிக்கும் மக்கள் இனி, இரு நகரங்களிலும் உள்ள போக்குவரத்து முனையங்களுக்கும் அங்குள்ள வர்த்தக வளாகங்களுக்கும் சைக்கிள்களில் எளிதாகச் செல்லலாம்.
அந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் புதிய 11 கிலோ மீட்டர் தூர சைக்கிள் ஓட்டப் பாதை அமைக்கும் பணி நிறைவுபெறுவதால், அவ்வட்டார மக்கள் சுவா சூ காங் சமூக மன்றம், லாட் ஒன், தெக் ஒய் வர்த்தக வளாகம், சன்ஷைன் பிளேஸ், இயூ டீ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு எளிதாகச் சென்று வரலாம் என்று ஆகஸ்ட் 25ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மேலும், இந்தப் புதிய சைக்கிள் ஓட்டப் பாதை இப்போதுள்ள பூங்கா இணைப்புகளை நிறைவு செய்வதுடன் சுவா சூ காங், இயூ டீ பூங்காக்கள் போன்ற பூங்காக்களுக்கு சிறந்த இணைப்பை வழங்கும் என்று அது கூறியது.
தீவு முழுதும் உள்ள சைக்கிள் பாதைக் கட்டமைப்புகள் இப்போது எவ்விதத் தடையுமின்றி இணைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தப் புதிய பாதையின் மூலம் சைக்கிளோட்டிகள் புக்கிட் பாஞ்சாங் போன்ற வட்டாரங்களில் உள்ள வர்த்தக வளாகங்களுக்கும் போக்குவரத்து முனையங்களுக்கும் எளிதில் சென்றுவர முடியும்.
இந்தப் புதிய பாதையை ஆகஸ்ட் 25ஆம் தேதி துணைப் பிரதமர் கான் கிம் யோங் திறந்து வைத்தார். பின்னர் அவர், இயூ டீ வட்டாரத்தில் இருந்து சைக்கிளில் பயணம் செய்து சுவா சூ காங் சமூக மன்றத்தை அடைந்தார். அங்கு செய்தியாளர்களையும் வட்டாரவாசிகளையும் சந்தித்துப் பேசினார்.
இந்தப் புதிய சைக்கிள் ஓட்டப் பாதைகள் மூலம் இரு நகரங்களிலும் உள்ள முக்கிய வசதிகளைக் கொண்ட இடங்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றுவரமுடியும் என்று கூறினார் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கான்.
இது சுவா சூ காங், இயூ டீ குடியிருப்பாளர்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாகும்; குறிப்பாக சுவா சூ காங் பகுதியில் சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று திரு கான் கூறினார்.
சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடற்பயிற்சி செய்ய விரும்பும் குடியிருப்பாளர்களுக்கும், சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்களுக்கும் இந்தப் பாதை மேம்பட்ட வசதியை வழங்குவதாக அமையும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவைப் பாதையின் அனைத்து நிலையங்களையும், சுவா சூ காங், இயூ டீ எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றையும் இப்போது குடியிருப்பாளர்கள் புதிய பாதைகள் வழியாக எளிதில் எட்ட முடியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
சுவா சூ காங் எம்ஆர்டி நிலையம், கியட் ஹொங், ஃபீனிக்ஸ், சவுத் வியூ, டெக் வாய் இலகு ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் 300க்கும் மேற்பட்ட சைக்கிள் நிறுத்தும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,300 கி.மீ. தொலைவு சைக்கிள் பாதைகளை அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது ஆணையம். அதன் அடிப்படையில் தீவெங்கிலும் உள்ள வீவக குடியிருப்புப் பேட்டைகள் மற்றும் பூங்காக்களில் சில, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சைக்கிள் பாதைகளைப் பெறும் என்று ஆணையம் கூறியது.