சிங்கப்பூரில், நிறுவனங்கள் முதலீடு செய்யக்கூடிய தொழில்நுட்பங்களை மாற்ற உதவும் ஆய்வுகளுக்காக $300 மில்லியன் மதிப்பிலான புதிய மானியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்களுக்கு, தொழில்முனைப்பு நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களுக்கான உரிமம் மூலமாக வர்த்தகமயமாக்கப்பட்டு, தனியார் துறையின் முதலீட்டிற்குத் தயாராகும் வரை இம்மானியம் ஆதரவளிக்கும் என்று தேசிய ஆய்வு அறநிறுவனம் (என்ஆர்எஃப்) தெரிவித்தது.
இம்மானியத்தின்கீழ் ஒவ்வொரு திட்டத்திற்கும் $2 மில்லியன் வரை நிதியுதவி வழங்கப்படும். ஆற்றல்மிக்க, சிறந்த வகையில் செயல்பட்டுள்ள புதிய நிறுவனங்களை அடிப்படையிலிருந்து உருவாக்க உதவும் அமைப்புகளின் ஆதரவுபெற்ற திட்டங்களுக்கு $3 மில்லியன் வரை இந்நிதி உயர்த்தப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
என்ஆர்எஃப்-உடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்து உருவாக்க உதவும் அமைப்புகள், தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்தும் வரை ஆய்வாளர்களுக்கு துணையாக இருந்து வழிகாட்டும்.
இம்மானியத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பரில் தொடங்குகிறது.
தொழில்நுட்பத்தின் ஆற்றல், தனித்துவம், சந்தைத் தேவை போன்ற காரணங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
ஆகஸ்ட் 31 அன்று முழுமையாக வெளியிடப்பட்ட ‘ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு (ஆர்ஐஇ2030) முயற்சிகளை வழிநடத்துவதற்கான இலக்குகள், உத்திபூர்வமான முன்னுரிமைகள், முக்கிய முயற்சிகளை வரையறுக்கிறது.
ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு மன்றத்தின் தலைவருமான மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அடுத்த ஐந்தாண்டுகளில் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்புக்காக சிங்கப்பூர் சாதனை அளவாக $37 பில்லியனை, அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு விழுக்காட்டை முதலீடு செய்யும் என்று 2025 டிசம்பரில் அறிவித்திருந்தார்.
இது, ஆர்ஐஇ2025 திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட $28 பில்லியனைவிட அதிகம்.
பொருளியல், தேசிய உத்திபூர்வ பலன்களுக்காக 1991 முதல் சிங்கப்பூர் ஆய்வு, புத்தாக்கங்களில் ‘ஆர்ஐஇ2030’ திட்டத்தின் $37 பில்லியன் உட்பட $125 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
ஆகஸ்ட் 28ல் நடைபெற்ற அதிபர் அறிவியல், தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவரான ஹெங் சுவீ கியட், ‘ஆர்ஐஇ2030’ திட்டம் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும் என்றார்.
“முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியப் பொருளியல் மற்றும் உத்திபூர்வ முன்னுரிமைகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவது; இரண்டாவதாக, முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளைத் தொடர்ந்து தக்கவைப்பது; மூன்றாவதாக, நமது அடிப்படை ஆராய்ச்சித் திறன்களை அதிநவீன நிலையில் வைத்திருப்பது,” என்று அவர் குறிப்பிட்டார்.


