சிங்கப்பூரில் அதிக வேகத்திறன் கொண்ட புதிய 5ஜி சேவைகள்

சிங்கப்பூரில் அதிக வேகத்திறன் கொண்ட புதிய 5ஜி சேவைகள்

2 mins read
456dcebd-6bbc-4e58-9ed6-9474673b7f00
புதிய 5ஜி கட்டமைப்புச் சேவைகளுக்கு வாடிக்கையாளர்களை மாற்றும் பணிகளைச் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைத் தொலைத்தொடர்பு வசதிக்கான அடுத்தக்கட்ட விரிவாக்கத்திற்குள் சிங்கப்பூர் நுழைவதாக ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

அதற்கேற்ற வகையில் புதிய கட்டமைப்புக்கு வாடிக்கையாளர்களை மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் உள்ள நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நாடளாவிய சேவையை எட்டிவிட்ட நிலையில், அவற்றில் சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தனித்துவ 5ஜி கட்டமைப்புக்கு மாற்றி வருகின்றன.

எம்1, ஸ்டார்ஹப் ஆகியவற்றின் பழைய 5ஜி கட்டமைப்புகள் ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இது சிங்கப்பூரின் அடுத்த 5ஜி அறிமுகத்தைக் குறிக்கிறது.

பழைய 5ஜி கட்டமைப்புச் சேவைகளைக் கடந்த மே 31ஆம் தேதியுடன் நிறுத்திவிட்டதாக ஸ்டார்ஹப் தெரிவித்திருக்கும் வேளையில், தனது எல்லா 5ஜி தளங்களும் புதிய கட்டமைப்புக்கு மாறிவிட்டதாக எம்1 குறிப்பிட்டுள்ளது.

மற்ற இரு நிறுவனங்களான சிங்டெல்லும் சிம்பாவும் புதிய 5ஜி கட்டமைப்பு வசதிக்கு மாறுவது பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.

தனித்துவ 5ஜி கட்டமைப்பை முழுமையாக நிறுவி அதற்கான சேவையைச் சில கைப்பேசிக் கட்டமைப்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதேவேளை, பழைய 5ஜி கட்டமைப்புகளையும் பயன்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்கள் 5ஜி சேவையின் ஆரம்பகட்டப் பலன்களைத் தொடர்ந்து பெறும் நோக்கில் அந்த அனுமதி வழங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் தனித்துவ 5ஜி கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான தனது தொலைநோக்குத் திட்டத்தைக் கடந்த 2020ஆம் ஆண்டு ஆணையம் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் அந்த உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக மறுஆண்டே அது தெரிவித்தது.

தற்போது அந்தப் புதிய கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களைப் புதிய சேவைகளுக்கு மாற்றும் பணிகளைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவ்வாண்டு தொடங்கியதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

தனித்துவ 5ஜி உள்கட்டமைப்பில் இயங்கும் ‘5ஜி-எஸ்ஏ’ தொழில்நுட்பம் அதிக வேகம் மற்றும் ஆற்றலுடன் சீரான கட்டமைப்புச் செயல்பாட்டை உறுதிசெய்கிறது.

குறிப்புச் சொற்கள்