உயர்கல்வி நிலையங்களுக்குப் புதிய சேர்க்கை நடவடிக்கை: கல்வி அமைச்சு

உயர்கல்வி நிலையங்களுக்குப் புதிய சேர்க்கை நடவடிக்கை: கல்வி அமைச்சு

2 mins read
a31e5baa-6cae-40dc-b6b6-6cbdeed9f34b
உயர்நிலைப் பள்ளிகளில் முழுப் பாட அடிப்படையிலான கற்றல் பிரிவு 2024ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முழுப் பாட அடிப்படையிலான கற்றல் பிரிவின் முதலாவது மாணவர் தொகுதியினர் 2027ஆம் ஆண்டு சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ் பொதுக் கல்விச் சான்றிதழ் பெறுவர்.

அதனைத் தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு முதல் உயர்நிலைக்குப் பிந்திய கல்விக்கான ஒரு புதிய சேர்க்கை நடவடிக்கை மூலம் அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தற்போது சான்றிதழ் பெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வெவ்வேறு சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளன என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கல்விக்கான மூத்த துணை அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்தார்.

உயர்நிலைப் பள்ளிகளில் முழுப் பாட அடிப்படையிலான கற்றல் பிரிவு 2024ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. அதன்வழி அமைச்சு தனித்தனி விரைவு, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மற்றும் வழக்கநிலை (தொழில்நுட்பம்) கல்விப் பிரிவுகளை நீக்கியது.

முழுப் பாட அடிப்படையிலான கற்றல் பிரிவின்கீழ் 2027ஆம் ஆண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் மறுஆண்டு ஒரே நேரத்தில் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெறுவார்கள்.

இந்தப் புதிய சேர்க்கை நடவடிக்கையானது, கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை (Joint Admissions Exercise), பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைத் திட்டம் (Polytechnic Foundation Programme), தொழில்நுட்பக் கல்விக் கழக கூட்டுச் சேர்க்கை நடவடிக்கை (ITE Joint Intake Exercise) போன்ற பல்வேறு தனித்தனி சேர்க்கை முறைகளை மாற்றும்.

“தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்வி நிலையம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்ய ஒற்றைச் சேர்க்கை நடவடிக்கை செயல்படுத்தப்படும்,” என்று திரு நியோ தெரிவித்தார்.

அத்துடன், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பயன்படுத்தி எளிமையான, வசதியான முறையில் சேர்க்கை நடவடிக்கையில் பங்கேற்கவும் இந்தப் புதிய மாற்றம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் ஆர்வத்திற்கேற்ப உயர்கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சம மதிப்பெண்கள் பெறுபவருக்கு ‘விருப்ப வரிசை’ ஒரு தீர்மானிக்கும் காரணியாகச் சேர்க்கப்படும்.

மாணவர்களின் குடியுரிமை, விருப்ப வரிசை, மொத்த மதிப்பெண், கணினிக் குலுக்கல் முறை - இந்த வரிசையில் அவர்கள் தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்