சிங்கப்பூரில் தொற்று நோய்களைச் சமாளிக்க புதிய முகவை ஒன்று இவ்வாண்டின் முதல் பாதியில் நிறுவப்பட உள்ளது. அதற்கான மசோதா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
பரவும் நோய்களுக்கான பொது சுகாதார நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்க புதிய நடவடிக்கை கைகொடுக்கும்.
மேலும், பொது சுகாதார சமாளிப்புத் திறனுக்கான ஒத்துழைப்பையும் கட்டுப்பாட்டையும் மேம்படுத்த அது உதவும்.
2023 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கொவிட்-19 வெள்ளை அறிக்கை மீது விவாதம் நடைபெற்றபோது சுகாதார அமைச்சர் ஓங் யி காங், தொற்றுநோய் முகவை என்னும் புதிய அமைப்பை ஏற்படுத்த இருப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது சிங்கப்பூரில் தொற்றுநோய்களை நிர்வகிக்க பல்வேறு திறன்கொண்ட அமைப்புகள் உள்ளதாக சுகாதார துணை அமைச்சர் ரஹயு மஹ்ஸம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புதிய முகவைக்கான சட்டக் கட்டமைப்பை வரையறுக்கும் மசோதா மீதான இரண்டாம் வாசிப்பின்போது பேசிய அவர், அந்த அமைப்புகளைப் பட்டியலிட்டார்.
சுகாதார அமைச்சு தொற்று நோய் தடுப்பு குறித்த கொள்கையை வகுக்கிறது.
தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் பொது சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கையாள்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் ஓர் அமைப்பான சுகாதார மேம்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றார் அவர்.