தீவெங்கிலும் எஸ்எம்ஆர்டி பெருவிரைவு ரயிலில் பயணிப்பவர்கள், இவ்வாண்டின் பிற்பாதியிலிருந்து தமிழ் முரசு உட்பட எஸ்பிஎச் மீடியாவின் செய்தித்தாள்களை ரயில் நிலையங்களில் உள்ள தானியக்க இயந்திரங்களில் பெறமுடியும்.
செய்தி அறிக்கைகள், மின்னிலக்கத் திரைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அன்றாட முக்கியச் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்க ஏதுவாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடன் எஸ்பிஎச் மீடியா புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.
இவ்வாண்டின் பிற்பாதியில் பயணிகள் தங்கள் பயணப் பாதையில் உடனடிச் செய்திகளைப் பெறலாம்.
எம்ஆர்டி நிலையத் தளமேடைகளில் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மின்னிலக்கத் திரைகள் அமைக்கப்படவுள்ளன. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் செய்தி அறிவிப்புகளையும் பயணிகள் எதிர்பார்க்கலாம்.
மேலும், அச்சுப்படிகளை வாசிக்க விரும்புவோர்க்கு அவை எளிதில் கிடைக்கும் வகையில் எஸ்எம்ஆர்டி ரயில் நிலையங்களில் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், பெரித்தா ஹரியான் ஆகிய நாளிதழ்களை விநியோகிக்கும் தானியக்க இயந்திரங்கள் அமைக்கப்படும்.
வடக்கு-தெற்கு ரயில் பாதை, கிழக்கு-மேற்கு ரயில் பாதை, வட்ட ரயில் பாதை, தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகிய பெருவிரைவுப் பாதைகளையும், புக்கிட் பஞ்சாங் இலகு ரயில் பாதையையும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகிக்கிறது.
புரிந்துணர்வுக் குறிப்பு
தீவெங்கிலும் பயணிக்கும் மில்லியன்கணக்கான மக்களிடம் செய்திகளைக் கொண்டுசேர்த்து, பயணிக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் அமைந்த இந்தக் குறிப்பு புதன்கிழமை (ஜனவரி 28) கையெழுத்தானது.
எஸ்பிஎச் மீடியாவுக்கும், எஸ்எம்ஆர்டியின் வர்த்தகப் பிரிவான ‘ஸ்டெல்லர் லைஃப்ஸ்டைலுக்கும்’ இடையிலான இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில், எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி நியன் ஹூன் பிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூருக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் இரு நிறுவனங்களுக்கிடையே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் அதிவேகமாகச் சென்றுசேரும் சூழலில் சரியான நேரத்தில், துல்லியமான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள இந்த ஒப்பந்தம் உதவுகிறது,” என்று திரு சான் யெங் கிட் கூறினார்.
மக்கள் அன்றாடம் புழங்குமிடங்களில், அவர்கள் விரும்பத்தக்க வகையில் நம்பகமான தகவல்களை வழங்க உழைப்பதாகவும் திரு சான் குறிப்பிட்டார்.
“ஊடகக் குழுமத்துக்கும், பொதுப் போக்குவரத்து நிறுவனத்துக்கும் இடையிலான இந்தப் பங்காளித்துவம் மாறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இவ்விரு நிறுவனங்களும் பொதுச் சேவையில் தொடந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன,” என்றார் திரு நியன்.
பயணிகளிடம் சரியான மூலங்களின் வழியாகச் செய்திகள் சென்றடைவது அவசியம் என்ற அவர், இந்த ஒப்பந்தம் அதற்கான வலுவான தளத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ள ‘இன் பெர்ஸ்பெக்டிவ்ஸ்’ எனும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், ஆண்டு முழுவதும் பயணிகள் குறித்த தரவுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்த ஆய்வுகள் இடம்பெறும்.

