சிங்கப்பூரின் அணுசக்திப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பும் அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் பயிற்சி உடன்பாடு ஒன்றில் ஏப்ரல் 17ஆம் தேதி கையெழுத்திட்டன.
இந்த ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், தேசிய சுற்றுப்புற வாரியத்துக்கும் அக்டோபர் 2025ல் உருவாக்கப்பட்ட அதன் அணுசக்திப் பாதுகாப்புப் பிரிவுக்கும் புதிய பயிற்சித் திட்டம் ஒன்று வடிவமைக்கப்படும் என்று வாரியம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தெரிவித்தது.
சிங்கப்பூரின் அணுசக்திப் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதிலும் அது தொடர்பான ஒழுங்குமுறை புரிதலை வளர்ப்பதிலும் இத்திட்டம் கவனம் செலுத்தும்.
அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் நடைபெறும் பயிற்சிகளில் தன் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என வாரியம் தெரிவித்தது. இதன்மூலம் அணு உலை ஒழுங்குமுறை, பாதுகாப்பு மதிப்பீடுகள், சாத்தியக்கூறு இடர் மதிப்பீடு, ஆய்வு நடைமுறைகள் போன்ற துறைகளில் நேரடி நடைமுறை அனுபவம் பெறுவார்கள் என்று வாரியம் குறிப்பிட்டது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைச் சிங்கப்பூர் ஆய்வு செய்துவரும் வேளையில், இந்த மேம்பட்ட நிபுணத்துவம், நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை குறித்த புரிதலை மேம்படுத்தும் என்று வாரியம் கூறியது. இந்தப் பயிற்சித் திட்டம் ஈராண்டுகளுக்கு நீடிக்கும்.
வியன்னாவில் நடைபெற்ற அனைத்துலக அணுசக்தி முகவையின் அணுசக்திப் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. வாரியத்தின் கதிர்வீச்சுப் பாதுகாப்பு, அணு அறிவியல் குழும இயக்குநர் அங் கோக் கியட்டும் அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்துலகத் திட்டங்கள் அலுவலக இயக்குநர் டேவிட் ஸ்கீனும் இதில் கையெழுத்திட்டனர்.
அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து சிங்கப்பூர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றாலும், அதன் சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது.
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தெரிவுகள் குறைவாக இருப்பதால், அணுசக்தி போன்ற குறைந்த கரிம மாற்றுகள், சிங்கப்பூரின் நிகர பூஜ்ஜியம் இலக்கை அடைய உதவுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம், அணுசக்திப் பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பு தொடர்பாக வாரியத்துக்கும் அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் இடையே ஏற்கெனவே நிலவிவரும் நீண்டகாலப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக இந்த உடன்பாடு அமைந்துள்ளதாக வாரியம் சொன்னது.

