தொலைத்தொடர்பு, ஒளிபரப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் சிங்கப்பூரும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஷங்ரிலா ஹோட்டலில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற நான்காவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒரு விருப்பக் குறிப்பு ஆகியவற்றின் ஒரு பகுதி இவை அமைந்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், புதிய, வளர்ந்து வரும் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டு முயற்சிகளை அடையாளம் கண்டு ஆராயவும் 2022ல் இந்த வட்டமேசைச் சந்திப்பு தொடங்கப்பட்டது.
நல்லுறவை வளர்க்கும் தனித்துவமான தளம்
வட்டமேசைச் சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான (வர்த்தகம்) கான் கிம் யோங், முந்தைய சந்திப்புடன் ஒப்பிடுகையில் இருதரப்பு உறவு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதைச் சுட்டினார்.
இந்த உயர்மட்டச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் மட்டுமே நேரடியாகப் பேசும் இந்தச் சந்திப்பின் தனித்துவமான வடிவம் ஆழமான, திறந்த கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறினார்.
“ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை, நல்லுறவை வளர்த்துக்கொள்வதுதான் இத்தளத்தின் மிக முக்கியமான மதிப்பு. இது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்,” என்று திரு கான் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமர் கான் தலைமையிலான சிங்கப்பூர் பேராளர் குழுவில், மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியப் பேராளர் குழுவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக, தொழில்துறை, மின்னணு, தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சருமான ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆறு தூண்களில் முன்னேற்றம்
மேம்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு, மின்னிலக்கமயம், தொடர்பு, நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, மருத்துவம் ஆகிய ஆறு முக்கியத் தூண்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களைப் பற்றி திரு கான் பகிர்ந்தார்.
மேம்பட்ட உற்பத்தித் துறை குறித்துப் பேசிய திரு கான், 2024ல் இந்தியா - சிங்கப்பூர் பகுதி மின்கடத்திச் சூழலமைப்புப் பங்களிப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து, பல பகுதி மின்கடத்தித் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர் என்றார்.
இந்த நிறுவனங்கள் தங்களது விநியோகிப்பாளர்களையும் குறிப்பாக, சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, அங்கு ஓர் ஒருங்கிணைந்த பகுதி மின்கடத்திச் சூழலமைப்பை உருவாக்க விரும்புகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
திறன் மேம்பாட்டுத் தூணின்கீழ், சென்னையில் மேம்பட்ட உற்பத்திக்கான தேசிய உன்னத நிலையத்தை (National Centre of Excellence) நிறுவுவதற்குச் சிங்கப்பூர் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.
ஊழியர்களின் பயிற்சித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்விச் சேவைகள் பிரிவு (ITE Education Services) வரும் செப்டம்பரில் தேவைகள் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ளும்.
மின்னிலக்கமயம் குறித்துப் பேசிய திரு கான், பேநவ்-யுபிஐ இணைப்பு 2026ன் முற்பாதியில் கிட்டத்தட்ட S$21 மில்லியன் பரிவர்த்தனை மதிப்பை எட்டியுள்ளது என்றும் இது 2025 முற்பாதியுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆசியான் பங்காளர்களை உள்ளடக்கிய பன்முகக் கட்டணத் தளமான ‘புரோஜெக்ட் நெக்ஸஸ்’ (Project Nexus) 2027ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மூலதனச் சந்தைகளை விரிவுபடுத்துவதற்காக இந்திய தேசியப் பங்குச் சந்தையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளைச் சிங்கப்பூர் பங்குச் சந்தை ஆராய்ந்து வருவதாகவும், அதே நேரத்தில் ராஜஸ்தானில் ஒரு நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த தொழிற்பூங்காவை அமைக்க ஆர்வமுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இந்திய அதிகாரிகள் உதவி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
தொடர்புத் துறை குறித்துப் பேசிய திரு கான், பசுமை, மின்னிலக்கக் கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவது, இருநாடுகளுக்கும் இடையிலான விமானச் சேவை ஒப்பந்தத்தை (Air Services Agreement) விரிவுபடுத்துவது குறித்து இருதரப்பும் பேசியதாக கூறினார். இதற்கிடையே, இரு நாடுகளும் விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, செம்மையாக்கம் (Maintenance, Repair and Overhaul) திறன்களுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளன.
நீடித்த நிலைத்தன்மை குறித்துப் பேசுகையில், அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கான உணவு விநியோகத் தொடர் மீள்திறன் ஏற்பாட்டை இரு நாடுகளும் இறுதி செய்து வருகின்றன. அதே வேளையில் விவசாயத் துறை சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாடு, உணவுப் பதப்படுத்தும் முதலீடுகள் ஆகியன குறித்தும் அவை ஆராய்ந்து வருகின்றன.
சுகாதாரப் பராமரிப்பு, வளர்ந்து வரும் துறைகளில், சிங்கப்பூரின் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியத் தாதியர்களுக்கான பயிற்சித் திட்டங்களில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தைத் திரு கான் சுட்டிக்காட்டினார். ஆயுர்வேத மருத்துவத் துறை தொடர்பாகச் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் பணிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள வேளையில், விரைவில் இதற்கான உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகத் திரு கான் தெரிவித்தார்.
மேலும், சிங்கப்பூர் தேசிய விண்வெளி நிறுவனம், இந்தியாவின் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையம் ஆகியவற்றுக்கு இடையேயான விண்வெளித் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சிறிய மாடுலர் அணு உலைகள் (Small Modular Reactors) பற்றிய பகிர்வுகள், இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியப் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கான தளத்தைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் ஆராய்ந்ததாக அவர் மேலும் கூறினார்.


