சிங்கப்பூரில், $6 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டு நிலையம், எஸ்எம்ஆர்டி பேருந்துகளை நிகழ்நேரத்தில் கண்காணித்துச் சேவையை இன்னும் சுமுகமாக்கவிருக்கிறது.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டுக் கோபுரம்போலச் செயல்படும் புதிய நிலையம், பேருந்துச் சேவையை மேலும் நம்பகத்தன்மையுள்ளதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள நிர்வாகிகள் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று வருவது போன்றவற்றைக் கண்காணிப்பதுடன் பேருந்து ஓட்டுநர்கள் களைப்படையும்போது அதுகுறித்து எச்சரிக்கையையும் எழுப்புவர் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங் தெரிவித்தார்.
ரயில் சேவைகளில் கோளாறோ போக்குவரத்து நெரிசலோ ஏற்பட்டால் இன்னும் விரைவாகச் சேவை வழங்கவும் புதிய நிலையம் உதவி வழங்கும்.
இயூ டீக்கு அருகில் உள்ள காலி பத்து பேருந்துப் பணிமனையில் புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.
அறிவார்ந்த செயல்பாடுகளுக்கான கட்டுப்பாட்டு நிலையம் என்றும் அழைக்கப்படும் புதிய நிலையம், எஸ்எம்ஆர்டி உட்லண்ட்ஸ், சூன் லீ பணிமனை ஆகியவை கையாண்ட பேருந்துச் சேவைகளை ஒருங்கிணைக்கும்.
புதிய நிலையத்தைப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
எந்தப் பேருந்து எங்குச் செல்லவேண்டும் என்ற தகவல்கள், பேருந்துகளின் நடமாட்டம், அவற்றின் சுகாதாரம், சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பான ஓட்டுநர் எச்சரிக்கைகள் போன்ற பல்வேறு அம்சங்களைப் புதிய நிலையம் ஒரே கூரையின்கீழ் கொண்டுவருகிறது.
ஜூன் மாதத்திலிருந்து செயல்படும் நிலையத்தில் கிட்டத்தட்ட 50 அதிகாரிகள் 1,200க்கும் அதிகமான பேருந்துகளைக் கண்காணிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் பேருந்துகளைக் கண்காணிப்பர். ஒவ்வோர் அதிகாரியும் கிட்டத்தட்ட 60 பேருந்துகளைக் கண்காணிக்கும் அளவிற்குப் புதிய நிலையம் வசதிகளைக் கொண்டுள்ளது.
புதிய நிலையத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஓட்டுநர்களுக்கு இருக்கும் களைப்பையும் பாதுகாப்பற்ற வகையில் பேருந்துகள் ஓட்டப்படுவதையும் கண்டறிகிறது.


