புதுப்பொலிவு பெறும் ஒன்-நார்த் வட்டாரத்தில் புதிய ‘ஏஐ’ தொழிற்பேட்டை

புதுப்பொலிவு பெறும் ஒன்-நார்த் வட்டாரத்தில் புதிய ‘ஏஐ’ தொழிற்பேட்டை

2 mins read
60feefed-0741-4fe2-b2f6-0a0439ce3983
லாஞ்ச்பேட்@ஒன்-நார்த் வட்டாரத்தில் வரவிருக்கும் ‘கம்போங் ஏஐ’ திட்டத்தின் மாதிரி வடிவம். - படம்: ஜேடிசி
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ‘ஒன்-நார்த்’ வட்டாரத்தில் நிலப் பயன்பாட்டு மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் புதிய நிலப் பயன்பாட்டு மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம், அங்குச் செயல்படும் புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த இடவசதி இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

பலவகை நிறுவனங்களையும் ஒரு கூட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் நடுவமாக ‘லாஞ்ச்பேட்’ அமைப்பை ஜேடிசி நிறுவனம் 2015ஆம் ஆண்டு தொடங்கியது.

இது தொடங்கப்பட்டதிலிருந்து கரோசெல், பேட்ஸ்னேப், நியாம் உட்பட 2,400க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களுக்கு இடமளித்துள்ளது.

இந்த நிலப் பயன்பாட்டு மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, அங்குப் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழிற்பேட்டையும் அதிகாரபூர்வமாக அமையவுள்ளது. வர்த்தக, தொழில் அமைச்சு அதனை இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவித்தது.

தற்போது, லாஞ்ச்பேட் பல்வேறு வட்டாரங்களை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகள் தொழிற்பேட்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள வட்டார உருமாற்றத்தின் மூலம் ஜேடிசி நிறுவனத்தால் வளாகம் முழுதும் புதிய நிகழ்வு இடங்கள், விளையாட்டு வசதிகள், நட்புறவுப் பகுதிகளுடன் கூடுதல் உணவு, பானக் கடைகளையும் சேர்க்க முடியும்.

புதிய கூரை இணைப்புகள் உட்பட, கட்டடப் பிரிவுகளுக்கு இடையே பாதுகாக்கப்பட்ட கூரை நடைபாதை இணைப்புகளும் மேம்படுத்தப்படும்.

லாஞ்ச்பேட் அமைப்பைப் புதுப்பிக்கும் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன.

‘கம்போங் ஏஐ’க்கான செயற்கை நுண்ணறிவுப் பிரிவை வடிவமைத்து உருவாக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ஜூலை 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கட்டடத்தில் 14,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழிற்பேட்டைக்கான இடவசதி இருக்கும். அங்கு 70 நிறுவனங்கள் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் பொது இடவசதிகளும் இருக்கும். ஒப்பந்தப்புள்ளி இம்மாதம் 24ஆம் தேதி நிறைவடைகிறது.

தங்குமிடப் பிரிவு, வளாக மேம்பாட்டிற்கான தனித்தனி ஒப்பந்தப்புள்ளிகள் கட்டங்கட்டமாகத் தொடங்கப்படும். ‘கம்போங் ஏஐ’ திட்டம் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நிறுவனம்தொழில்நுட்பம்செயற்கை நுண்ணறிவுதொழிற்பேட்டை