சிங்கப்பூர் வழக்கறிஞர்களின் நேரத்தை மிச்சமாக்கும் விதமாகவும் வேகமாகத் திறம்படச் செயல்படும் நோக்கத்துடனும் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘லாநெட்’ (LawNet) என்ற அந்தத் தளத்தில் ஆய்வறிக்கை உள்ளிட்ட பல தகவல்களைச் சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் வேகமாகப் பெறலாம்.
சிங்கப்பூர் சட்டக்கழகத்துடன் இணைந்து இந்த ‘லாநெட்’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தளத்தில் நீதித்துறை சார்ந்த கேள்விகளைக் கேட்கலாம். அவர்களுக்குச் சம்பவம் சார்ந்த சிறந்த பதில்களை அத்தளம் கொடுக்கும்.
சிங்கப்பூர் நீதித்துறையின் கட்டமைப்பைப் பின்பற்றி ‘லாநெட்’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் விதிக்கப்பட்ட தீர்ப்புகள், வழக்கு ஆய்வறிக்கை, சட்டங்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் தரவுகளை ‘லாநெட்’ தளம்கொண்டுள்ளது.
டெக்லா (TechLaw) மாநாட்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 11) இந்தத் தளம் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டு வெளியான GPT-Legal தளம்மூலம் சுருக்கவுரைகளைப் பெறமுடிந்தது. இருப்பினும் அதில் சில சவால்கள் இருந்தன.
“தற்போது வெளியாகியுள்ள ‘லாநெட்’ தளம் சட்டத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கறிஞர்கள் அவர்களுக்குப் பொருந்தும் இயல்பான மொழியில் தகவல்களைப் பெற முடியும். மிக முக்கியமாகச் சிங்கப்பூர் நீதித்துறையின் கட்டமைப்புக்கு ஏற்றவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது,” என்று நீதிபதி குவெக் மீன் லக் தெரிவித்தார்.