சிங்கப்பூரின் அடுத்த தலைமுறை விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல் அமைப்பில் இணைக்கப்படவுள்ள புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவி தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படும் இரண்டு விமானங்கள் பாதுகாப்பாகப் பறக்கத் தேவையான கால இடைவெளியையும் தூரத்தையும் தீர்மானிக்கும் செயல்முறையை இந்தக் கருவி தானியக்கமாக்கும்.
இக்கருவியைச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் MITRE ஆசிய பசிபிக் சிங்கப்பூர் ஆய்வு ஆய்வகமும் உருவாக்கி வருகின்றன. அடுத்த தலைமுறை விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல் அமைப்பு 2020ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தின் பிற்பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவியானது, அடுத்தடுத்துப் புறப்படும் இரண்டு விமானங்களுக்கு இடையே மோதல்களைத் தவிர்க்கவும் ‘வேக் டர்புலன்ஸ்’ (விமானம் பறக்கும்போது ஏற்படும் காற்று இடையூறு) பாதிப்புகளைச் சமாளிக்கவும் தேவையான துல்லியமான கால இடைவெளியை ஒரு ‘கவுண்ட்டவுன்’ மூலம் காட்டும்.
இரண்டு விமானங்களில் முதலாவது விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டவுடன் அவற்றுக்கிடையே பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச செங்குத்து மற்றும் கிடைமட்ட தூரத்தைக் கணக்கிட்டு இது நேரத்தை அறிவிக்கும்.
கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு ‘ரன்டவுன் கிளாக்’ என்ற ‘கவுண்ட்டவுன்’ காட்சி காட்டப்படும் என்று ஆணையத்தின் விமானப் போக்குவரத்துச் சேவைப் பிரிவு இயக்குநர் வின்சென்ட் ஹுவா தெரிவித்தார்.
இந்தக் ‘கவுண்ட்டவுன்’ பூஜ்ஜியத்தை எட்டியதும், கட்டுப்பாட்டாளர்கள் இரண்டாவது விமானம் புறப்பட அனுமதி வழங்கலாம். இது அவர்களுக்குப் ‘பாதுகாப்பு உத்தரவாதத்தை’ வழங்குவதோடு, ‘மிகச் சரியான தருணத்தில்’ விமானங்கள் புறப்பட அனுமதிக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.
இது ஓடுபாதையிலும் வான்வெளியிலும் விமானங்களைக் கையாளும் திறனை அதிகப்படுத்தும் என்று திரு ஹுவா குறிப்பிட்டார். மேலும், இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு, தகவல்களைச் செயலாக்குவதில் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சிங்கப்பூரில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு நேரத்தைவிடச் சற்று கூடுதல் கால இடைவெளியைப் பயன்படுத்துவதும் ஒவ்வொரு கட்டுப்பாட்டாளரும் வெவ்வேறு கால அளவுகளை நிர்ணயிப்பதும் தெரியவந்தது.
இந்தக் கருவி அத்தகைய முரண்பாடுகளைக் களைந்து, சாங்கி விமான நிலைய ஓடுபாதைகளின் செயல்திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

