பழைய கட்டடங்களின் விற்பனையை எளிதாக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா சட்டமானால், 60 ஆண்டு பழைமையான வீடுகளுக்கு 65% ஒப்புதலே போதும்

பழைய கட்டடங்களின் விற்பனையை எளிதாக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா

3 mins read
ad7abfc0-ddef-4ad8-9da6-0786af1c551d
40 முதல் 59 ஆண்டுகள் பழைமையான குடியிருப்புகளின் கூட்டு விற்பனைக்குரிய ஒப்புதல் வரம்பு 80 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாகக் குறைக்கப்படுவதற்குப் புதிய சட்டத்திருத்த மசோதா வழிவிடும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பழைய குடியிருப்புப் பேட்டைகளை மறுசீரமைக்கவும் நிலவளங்களின் பயன்பாட்டை உகந்த வகையில் முறைப்படுத்தவும் உதவும் இலக்குடன் மனைகளின் ஒட்டுமொத்த விற்பனைக்கான ஒப்புதல் உச்சவரம்புகளைக் குறைக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புதிய வழிகாட்டுதல்கள், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) சட்ட அமைச்சு தாக்கல் செய்த ‘நிலப்பட்டா கூட்டுரிமைச் சட்டத் திருத்த மசோதா 2026’ மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.

புதிய ஒப்புதல் வரம்புகள் 

40 முதல் 59 ஆண்டுகள் பழைமையான குடியிருப்புகளின் கூட்டு விற்பனைக்குரிய ஒப்புதல் வரம்பு 80 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாய்க் குறைக்கப்படுவதாக மசோதா சுட்டியது.

மேலும் 60 ஆண்டுகளை எட்டிய கட்டடங்களுக்கான ஒப்புதல் உச்சவரம்பு கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்போதைய 80 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டப்படி 10 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கட்டடங்களை மொத்தமாக விற்க 80 விழுக்காட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் தேவையாக உள்ளது.  ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின்கீழ் கட்டடத்தின் ஆண்டுகளைப் பொறுத்து இந்த வரம்புகள் கணிசமாகக் குறைக்கப்படவுள்ளன

அதன்படி 10 ஆண்டுகளுக்குக்கீழ் உள்ள கட்டடங்களின் தற்போதைய வரம்பு முன்பிருந்த 90 விழுக்காடு என்ற அளவில் நீடிக்கும். 

10 முதல் 39 ஆண்டுகள் வரையிலான கட்டடங்களுக்கான வரம்பும் முன்பிருந்த 80 விழுக்காட்டிலேயே தொடரும்.

வீட்டு உரிமையாளர்கள் குறைந்தது 850 ஆண்டுகள் குத்தகைக்காலத்தைக் கொண்டிருந்தால் இத்தகைய குடியிருப்புகளைப் பெரும்பான்மை ஒப்புதலின் மூலம் தற்போது ஒட்டுமொத்த விற்பனைக்கு விடமுடியும். புதிய மசோதாவின்படி, 850 ஆண்டுகளுக்கும் குறைவான குத்தகைக்காலத்தைக் கொண்ட வீட்டு உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும்.

ஏன் இந்த மாற்றம்? 

1999ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுள்ள பல கட்டடங்கள் மிகவும் முதிர்ச்சியடைந்துவிட்டதால் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தம் உரிமையாளர்கள் சொத்துகளை மறுசீரமைக்க நடைமுறைக்குச் சாத்தியமான வாய்ப்பை நல்கும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

கூட்டு விற்பனைகளுக்கான தற்போதைய ஒப்புதல் வரம்புகள் முதன்முதலில் 1999ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு பல கட்டடங்கள் கணிசமான அளவுக்குப் பழைமையாகிவிட்டன என்று அமைச்சு தெரிவித்தது.

உரிமையாளர்கள் நலன் காக்கும் அம்சம்

இதற்கிடையே விற்பனையை விரும்பாத உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கும் அம்சங்களும் சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த விற்பனைக் குழுவை அமைக்கப் பொதுக்கூட்டத்தைக் கூட்டத் தேவைப்படும் உரிமையாளர்களின் குறைந்தபட்ச ஆதரவு வரம்பு 20 அல்லது 25 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று மசோதா விவரித்தது.

சட்டத்திருத்த மசோதாவின் மற்றொரு முக்கிய அம்சம், விற்பனை ஒப்பந்தத்தில்  கையெழுத்துச் சேகரிப்பதற்கான அவகாசம் 12 மாதங்களிலிருந்து 6 மாதங்களாகக் குறைக்கப்படுகிறது.

அதேபோல விற்பனை முயற்சி தோல்வியடைந்தால், அடுத்த முயற்சியைத் தொடங்குவதற்கான காலமும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

நெப்டியூன் கோர்ட், ஒன் ட்ரீ ஹில் மேன்ஷன்ஸ், பேட்டர்சன் கோர்ட், ஆர்ச்சர்ட் கோர்ட், டவுன்ஹவுஸ் அபார்ட்மெண்ட்ஸ், நீண்டகாலக் குத்தகை கொண்ட நில உரிமையற்ற குடியிருப்புகளுக்கும் இனி பெரும்பான்மை ஒப்புதல் அடிப்படையில் மொத்த விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்தச் சட்டத்திருத்த மசோதா அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இரண்டாம் வாசிப்புக்கு வரும்.

தனியார் சொத்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளையும் 2023 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட பல சுற்று ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. 

குறிப்புச் சொற்கள்
குடியிருப்புப் பேட்டைசிங்கப்பூர்மசோதா