சாலைப் போக்குவரத்துக்கான புதிய சட்டத் திருத்தம்: டிசம்பர் 1 முதல் அமல்

சாலைப் போக்குவரத்துக்கான புதிய சட்டத் திருத்தம்: டிசம்பர் 1 முதல் அமல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Nov 2026 - 10:25 am

2 mins read

சிங்கப்பூரில் நிகழும் போக்குவரத்து குற்றங்களைக் கட்டுக்குள் வைக்க அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான சட்ட திருத்தங்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலாக்கப்படும்.

அதனை உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்தது.

அத்திருத்தங்களில் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பிடித்திருப்பதற்கான தடையும் உள்ளடங்கும்.

புதிய சட்டத்தின்கீழ், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தாவிட்டாலும் அதனைக் கையில் பிடித்திருப்பது குற்றமாகும்.

வாகனம் நிலையாக நிற்கும்போது ஓட்டுநர்கள் பொருத்தப்பட்ட சாதனங்களைத் தொடவோ கைப்பேசியைப் பிடிக்கவோ அனுமதிக்கப்படுவர். இருப்பினும், சாதனப் பயன்பாடு கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டும் முறையைப் பாதித்தால், கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.

முழுகவனமின்றி வாகனம் ஓட்டுவோருக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்தவே இத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிறரின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே வாகனத்தைப் பயன்படுத்தி உயிரிழப்பு அல்லது கடும் காயத்தை ஏற்படுத்தும் புதிய குற்றமும் அறிமுகம் செய்யப்படுகிறது.

அக்குற்றங்களைப் புரிவோருக்கு 15 ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்;

அத்துடன் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படுவதோடு குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்படலாம்.

மேலும், கடும் காயம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கான அதிகபட்சச் சிறைத்தண்டனை முதல்முறைக் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகளாகவும், மீண்டும் குற்றம் புரிவோருக்கு 13 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டித் தீவிரக் குற்றம் புரிவோருக்கு 18 மாதங்களாகவும், மீண்டும் அவ்வாறு செய்வோருக்கு மூன்றாண்டுகள் ஆறு மாதங்களாகவும் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்போக்குவரத்துக் காவல்துறைபோக்குவரத்துபோக்குவரத்து அமைச்சுசட்டம்புதிய சட்டம்புதிய சட்டத்தின்கீழ் முதல் தண்டனைதண்டனைசிறைசிறைச்சாலைசிறைத்தண்டனைசிறைத்துறைசாலைகைப்பேசிகுற்றம்உள்துறை அமைச்சுஅமலாக்கம்