குறைந்தது மூன்று சிங்கப்பூர்வாசிகளைக்கொண்ட நிறுவனங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொழில்நிறுவன உதவிநிதியின் கீழ் (SkillsFuture Enterprise Credit Scheme) புதிதாக $10,000 உதவித்தொகையை 2026ன் இரண்டாம் பாதியில் பெறும்.
மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை நீடிக்கும். ஏற்கெனவே உள்ள தொகையின் காலவரம்பு, புதிய தொகை தயாராவதுவரை நீட்டிக்கப்படும்.
நிறுவன, ஊழியரணி மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் இந்நிதி பட்ஜெட் 2020ல் அறிமுகமானது.
இந்நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என பலருக்கும் தெரியாததால், பயன்பாட்டை சுலபமாக்கும் வகையில், அது இணைய பணப்பையைப் போல் மறுவடிவமைக்கப்படும் என்றார் பிரதமர் வோங்.
இதன்மூலம், நிறுவனங்கள் தாங்கள் பெறக்கூடிய உதவிநிதியை எளிதில் அறிந்துகொள்ளலாம். அதைக்கொண்டு உடனடியாகப் பணம் செலுத்தலாம்.
புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊழியரணி வளர்ச்சி மானியம்
வேலை மறுவடிவமைப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதியாதரவு (அதிகபட்சம் 70 விழுக்காடு) வழங்கும் புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊழியரணி வளர்ச்சி மானியமும் (SkillsFuture Workforce Development Grant) அறிமுகமாகவுள்ளது.
இம்மானியம், ஏற்கெனவே ஊழியரணி சிங்கப்பூர், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் வழங்கும் திட்டங்களை இணைத்து, நிறுவனங்களுக்கான விண்ணப்ப வழிமுறையை சுலபமாக்கும்.
என்டியுசி மானியத்துக்கு கூடுதல் $200 மில்லியன்
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) நிறுவனப் பயிற்சிக் குழு மானியத்துக்குக் கூடுதலாக $200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இம்மானியம்வழி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், வேலைகளை மறுவடிவமைக்கவும், ஊழியர் திறனை வளர்க்கவும் முயற்சி எடுக்கும் நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.
இத்திட்டம் 2019ல் தொடங்கியதிலிருந்து, என்டியுசி 2,700க்கும் மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைத்துள்ளது. 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பயன் விளைவிக்கும் 400க்கும் மேற்பட்ட திட்டங்களை இம்மானியம் ஆதரித்து வருகிறது.