நெருக்கடிநிலையின் தன்மை மாறி வருகிறது. அதிவேக இணைக்கப்படக்கூடிய இன்றைய உலகில் நெருக்கடிகள், சுற்றுச்சூழல் அல்லது சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்குள் மட்டும் சுருங்கிவிடுவதில்லை.
மாறாக, அவை ஒரே நேரத்தில் பல துறைகளைப் பாதிக்கின்றன. அவை அதிவேகமாகப் பரவக்கூடியவையாகவும், அளவுக்கு மீறிய தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும், எல்லைகளைத் தாண்டிச் செல்பவையாகவும் இருக்கின்றன.
இன்று மத்திய கிழக்கு நிலவரத்திலும் இதேபோன்ற சிக்கலையும் நிச்சயமற்ற தன்மையையும் நாம் காண்கிறோம் என்று உள்துறை மூத்த துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் தலைமைத்துவமானது எந்தவொரு நெருக்கடியிலும் மக்களைப் பாதுகாத்து வழிநடத்த, மாறிவரும் நெருக்கடிச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) இடம்பெற்ற நெருக்கடிநிலைத் தலைமைத்துவக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான திரு ஃபைஷால் இப்ராஹிம்.
பெருகிவரும் சிக்கலான, பல துறைகளை உள்ளடக்கிய நெருக்கடிகளைக் கையாள்வதற்குத் தேவையான முக்கிய நுண்ணறிவுகள், திறன்களுடன் தலைவர்களை இக்கருத்தரங்கு ஆயத்தப்படுத்தியது.
அவசியமான இரு நடைமுறைகள்
அதற்கு, அவசியமான இரண்டு நெருக்கடிநிலைக் கால தலைமைத்துவ நடைமுறைகளைத் திரு ஃபைஷால் முன்னிலைப்படுத்தினார்.
“முதற்கட்டமாக, சுறுசுறுப்பாக முடிவெடுக்க வேண்டும். கட்டமைக்கப்பட்ட, அதேசமயம் நீக்குப்போக்கான அணுகுமுறையின் மூலம் சுறுசுறுப்பாக முடிவெடுக்கும் திறன் இந்தச் சவாலை எதிர்கொள்கிறது. எதை மேம்படுத்தலாம் என்பதை அறிய, தலைவர்கள் நிலைமைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்யவும், செயல்படுத்தவும், மறுபரிசீலனை செய்யவும் வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நெருக்கடிநிலைத் தலைமைத்துவத்தில் ஒருங்கிணைத்தல்.
புதியவகை நெருக்கடிநிலைகளின் போது முடிவெடுப்பது கடினமானதால், அதற்கு உதவ இரண்டு முக்கிய அணுகுமுறைகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட பகுத்தறிவு, பகுப்பாய்வுத் திறன்களில் தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றார் திரு ஃபைஷால்.
மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் நெருக்கடிநிலைக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியவும், புதுமையான தீர்வுகளைக் காணவும் உதவுவதாகக் குறிப்பிட்ட திரு ஃபைஷால், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களாலும் நெருக்கடிநிலைச் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும் என்றும் சுட்டினார்.
“நெருக்கடிநிலையின்போது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து ஆராய்வோம். மேலும், தலைவர்கள், ஊழியர்களின் தொழில்நுட்ப, மின்னிலக்க அறிவுத்திறனை மேம்படுத்துவதிலும் நாங்கள் முதலீடு செய்வோம்,” என்று சொன்னார் திரு ஃபைஷால்.
நெருக்கடிநிலைத் தலைமைத்துவ நடைமுறைகளில் புதுமையான அணுகுமுறைகள், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் முன்னணியில் இருப்பதற்குச் சிங்கப்பூர் தொடர்ந்து உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தகவல் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு அண்மைப் பிரச்சினைகள், தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுப் பகிர்வுக்கான உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்றும் திரு ஃபைஷால் வலியுறுத்தினார்.

