சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் முதன்முறையாக உணர்வுகளை மையப்படுத்தி ‘கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தை உணருங்கள்’ (Feel your way through the gallery) என்ற தன்வழிகாட்டுதல் பயணத்தடம் திறக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி உடனான கூட்டுமுயற்சியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயணத்தடம் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 3) முதல் பார்வையாளர்களை வரவேற்று வருகிறது.
‘இன்சைடு அவுட் 2’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தின் உணர்வுகளை எடுத்துக்காட்டும் வகையில் முழுப் பயணத்தடமும் அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை கலைக்கூடத்தின் வருகையாளர்கள் இந்தப் பயணத்தடத்தில் பங்கேற்கலாம். இதற்குப் பொது அனுமதி நுழைவுச்சீட்டுகளை மக்கள் பெற்றிருப்பது அவசியம்.
ஒவ்வொரு நாளும் பயணத்தடத்திற்கு வரும் முதல் 100 வருகையாளர்கள் நடவடிக்கைக் கையேடுகளை வருகையாளர் முகப்பில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கையேடுகளைப் பெற தவறுபவர்கள் இணையத்தில் இருக்கும் மின்கையேடுகளைப் பயன்படுத்தலாம்.
‘இன்சைடு அவுட் 2’ திரைப்படத்தின் ஐந்து மைய உணர்ச்சிகளான மகிழ்ச்சி, சோகம், கோபம், அச்சம், பதற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பயணத்தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேசியக் கலைக்கூடத்தின் பாரம்பரிய கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள 15 ஓவியங்கள் இந்த பயணத்தடத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கலைக்கூடத்தின் ஐந்து பொது இடங்களும் வெவ்வேறு உணர்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
கையேடுகளில் விளக்கப்பட்டுள்ள பாதையை ஒரு வழிகாட்டியாகப் பின்பற்றி பார்வையாளர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
அவர்கள் ஈடுபாட்டோடு கலந்துகொள்ள ஊக்குவிக்கும் எளிமையான விளையாட்டுகளையும் ஓவியத் தூண்டுகோல்களையும் இந்த கையேடுகளில் கண்டறியலாம்.
தொடர்புடைய செய்திகள்
குடும்பங்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ஓவியங்களின் மூலம் வெவ்வேறு உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தடத்திற்குச் செல்லும் பார்வையாளர்களுக்கு விளையாட்டும், அதே சமயத்தில் மதிப்பீடும் நிறைந்த ஓர் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு உண்டு.
மேல்விவரங்களுக்கு https://www.nationalgallery.sg/sg/en/workshops/Feel-Your-Way-Through-The-Gallery-Tour.html என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

