கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய கலைகள் மன்றமும் இணைந்து $20 மில்லியன் மதிப்புள்ள புதிய பல்லினப் பண்பாட்டுக் கலை மானியம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளன.
பாரம்பரிய, பன்முகக் கலாசார கலை வடிவங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதையும் சிங்கப்பூரர்களிடையே கலாசாரம் குறித்து கூடுதல் புரிதலை ஏற்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இத்தகவலை வெளியிட்டார்.
“இந்த முயற்சிகள் மூலம், நமது பல்லினக் கலாசார அடையாளத்தை அதிகமான சிங்கப்பூரர்கள் பாராட்ட நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
கலைப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மன்றம் வழங்கும் தற்போதைய ஆதரவை இந்த முயற்சி ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர், அனைத்துலக அரங்கில் பல்லினக் கலாசாரப் படைப்புகளை உருவாக்கவும் இந்த மானியம் உதவும்.
இதற்கிடையே, பன்முகக் கலாசாரக் கலை முயற்சிகளை வழிநடத்த, பல்லினப் பண்பாட்டு ஆலோசனைக் குழு ஒன்றை அதிபர் சவால் அமைக்கப்படும்.
2026 பிற்பாதியிலிருந்து, இந்த மானியத்துக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், உள்ளூர் கலைக் காட்சியில் குறிப்பிடத்தக்க பங்களிக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருக்க வேண்டும்.

