150,000 அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய செயற்கை நுண்ணறிவுப் பதிவகம்

150,000 அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய செயற்கை நுண்ணறிவுப் பதிவகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Jun 2026 - 9:41 am

2 mins read

சிங்கப்பூரிலுள்ள 150,000 அரசாங்க அதிகாரிகள் அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகச் செயற்கை நுண்ணறிவுப் பதிவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முகவர்போல செயல்படும் மென்பொருளுக்கான பதிவகம் அது.

தரவுப் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து தங்களது பணிகளைத் தொடர அந்தப் பதிவகம் உதவும்.

செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளின் உரிமையாளர்களையும் நடவடிக்கைகளையும் கண்காணிக்க உதவும் ஒரு பாதுகாப்பு அம்சமாகப் புதிய பதிவகம் திகழும். அதற்கான முடிவுகளை இயந்திர வேகத்தில் எடுத்து அது செயல்படுத்தும்.

குறியீடாக்கம் செய்வது முதல் அறிக்கைகளைத் தயாரிப்பது, சந்திப்புக் கூட்டங்களைத் திட்டமிடுவது வரை எல்லாவற்றிற்கும் செயற்கை நுண்ணறிவை அரசாங்க ஊழியர்கள் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களின் செயல்களைக் கூர்ந்து கண்காணிக்க அரசாங்கத் தொழில்நுட்ப முகமையின் (கவ்டெக்) தொழில்நுட்ப அம்சங்களின் தொகுப்பிற்கான ஒரு பகுதியே இந்தப் பதிவகம்.

ஏஐ அசிஸ்டன்ட் டெஸ்க் என்னும் இந்தத் தொகுப்பு அரசாங்க ஊழியர்களுக்குத் தேவையான ஒரு பாதுகாப்பான மின்னிலக்க உதவியாளரை வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கவ்டெக் தலைமை நிர்வாகி கோ வெய் பூன் தெரிவித்துள்ளார்.

“சிறப்பான வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்குவதற்குத் தேவையான தனிப்பயனாக்க விதிகள், அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், பதிவகம் ஆகியவற்றைக் கொண்ட ஓர் அடுக்கை ஏற்படுத்த விரும்புகிறோம்.

“அதன் மூலம், செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளை அரசாங்க அதிகாரிகள் சரியாகப் பயன்படுத்துவதை எங்களால் உறுதிசெய்ய முடியும்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு முகவர்கள் என்று அழைக்கப்படுபவை, பயனர்களின் இலக்குகளை அடைவதற்கும் பணிகளை முடிப்பதற்கும் அவர்கள் சார்பாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மென்பொருள் அமைப்புகளாகும்.

இன்னும் தயாரிப்பில் உள்ள ‘ஏஐ அசிஸ்டன்ட் டெஸ்க்’, இவ்வாண்டின் பிற்பகுதியில் பரவலாக அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் அது தற்போது அரசாங்க அதிகாரிகள் சிலரால் சோதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுஅதிகாரிமென்பொருள்