சுற்றுலாத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கவும் ஊழியர் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் புதிய செயற்கை நுண்ணறிவு வாழ்வியல் கூடம் (AI Living Lab) அறிமுகமாகிறது.
‘சிம்பையோசிஸ்’ என்ற அக்கூடம் புதன்கிழமை (நவம்பர் 25) ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் ‘த லவுரஸ்’ விடுதியில் அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டது. அது தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் இயங்குகிறது.
நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய தொழில்நுட்ப வல்லரசுகளுடன் வன்பொருள் உற்பத்தியில் மோதுவதற்கு மாறாக செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்பான, நம்பகமான முறையில் பயன்படுத்துவதே சிங்கப்பூரின் இலக்காக உள்ளது.
“ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் வெற்றிகரமாகச் சோதிக்கப்படும் தீர்வுகள், சிங்கப்பூரின் ஒட்டுமொத்தச் சுற்றுலாத் துறையிலும் பிற துறைகளிலும் விரிவுபடுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படலாம்,” என்றார் அவர்.
அக்கூடம் அடுத்த ஈராண்டுகளுக்குச் சோதிக்கப்படும். ஊழியர்களின் மேம்பாட்டிற்குச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவுகிறது, சுற்றுலாத்துறையின் சவால்களுக்கு எவ்வாறு அது தீர்வுகள் காண வழிவகுக்கிறது என்பனவை கண்காணிக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் அனுபவத்தைச் செம்மைப்படுத்துதல், ஆக்கத்திறனை அதிகரித்தல், ஊழியர் வளர்ச்சியில் கைகொடுத்தல் போன்றவை அதன் முக்கிய நோக்கங்களாக விளங்குகின்றன.
முதலில் சோதிக்கப்படவுள்ள திட்டங்களில் ‘எம்பதி வன்’ என்ற விருந்தினர்களின் உணர்வுகளைக் கண்டறியும் பயிற்சித் திட்டம் அடங்குகிறது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட விருந்தாளிக் கதாபாத்திரங்களைக் கையாள ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
தற்போது 50 ஊழியர்களுடன் சோதிக்கப்பட்டுள்ள அத்திட்டம் ஆண்டிறுதிக்குள் 300 ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
உணவுப் பொருள்களை உணவகங்களுக்குக் கொண்டுசேர்க்க குளிர்சாதனப் பெட்டி பொருத்திய தானியங்கி வாகனங்கள், உணவுகளை விநியோகிக்கப் பல்வேறு வானிலைகளில் இயங்கக்கூடிய தானியங்கி வாகனங்கள், தங்குமிடப் பராமரிப்புப் பணிகளில் உதவும் ரோபோக்கள் போன்ற பல்வேறு இயந்திரங்கள் முதற்கட்டச் சோதனையில் அறிமுகம் காணவுள்ளன.
அவற்றோடு வழிகாட்டி இயந்திரங்கள், கழிவறைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் ஆகியவையும் தங்குமிடங்களில் பயன்படுத்தப்படும்.
அத்தகைய இயந்திரங்களின் உதவியுடன் ஊழியர்களுக்கு உடல்ரீதியாகக் கடுமையான பணிகளைச் செயற்கை நுண்ணறிவின் கைகளுக்கு மாற்ற இத்திட்டம் முற்படுகிறது. அதன்வழி, மனிதர்களை முன்னிலைப்படுத்தும் சேவைகளில் ஊழியர்கள் அதிகம் ஈடுபட முடியுமென ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நம்புகிறது.
திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த பங்களிப்பை வழங்குகிறது.
இம்முயற்சி சிங்கப்பூர் தேசியச் செயற்கை நுண்ணறிவுத் தாக்கத் திட்டத்திற்கும் (Singapore’s National AI Impact Programme) சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் 2040ஆம் ஆண்டுத் தொலைநோக்குத் திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது.
