நவீன செயற்கை நுண்ணறிவு அம்சங்களால் உருவாகும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருமித்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க, சிங்கப்பூரிலுள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் சிங்கப்பூர் ஆணையத்தை நாடியுள்ளனர்.
இது தொடர்பாக, முக்கிய உள்கட்டமைப்புத் தகவல் நிறுவனங்களின் மூத்த தலைமைத்துவத்துக்கும் வாரிய உறுப்பினர்களுக்கும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையர் கடிதங்களை அனுப்ப இருப்பதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் செவ்வாய்க்கிழமை (மே 5) நாடாளுமன்றத்தில் கூறினார்.
அந்த நிறுவனங்களின் இணைய அபாயத்தைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்யுமாறு வலியுறுத்துவது அந்தக் கடிதங்களின் நோக்கம் என்றார் அவர்.
ஆந்த்ரோபிக்கின் ‘Claude Mythos Preview’ நவீன வகை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களை அரசாங்கம் கவனிப்பது தொடர்பாகவும் நாட்டின் மின்னிலக்கக் கட்டமைப்புகளை அத்தகைய அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த கேள்விகளுக்கு திரு டான் பதில் கூறினார்.
மென்பொருள் அமைப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் குறியீடுகளை உருவாக்கும் திறன் கொண்டதாக ஆந்த்ரோபிக்கின் புதிய தொழில்நுட்ப அம்சம் உள்ளதாக ஏப்ரல் மாதம் செய்திகள் பரவின.
இணைய ஊடுருவிகள் குறைந்த வளங்களைக் கொண்டு தாக்குதல்களை வேகப்படுத்த அந்த அம்சம் கைகொடுக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது.
அதற்கிணங்க, அந்த அமெரிக்க நிறுவனம் எல்லாவிதமான இயங்குதளங்களிலும் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய புதிய அம்சம் பயன்பட்டதாகக் கூறியிருந்தது.
அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய திரு டான், “அதுபோன்ற தாக்குதல்கள் வேகமானவை, பரந்த அளவிலானவை என்பதோடு மிகவும் நுட்பமானவை. தனித்து இயங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் முழுமையான தாக்குதல்களைத் தொடங்கவில்லை. ஆயினும், தொழில்நுட்ப வளர்ச்சியால் காலப்போக்கில் அது சாத்தியமாகக்கூடும்,” என்றார்.

