எஸ்பிஎச் நிறுவனத்தின் ‘த பிசினஸ் டைம்ஸ்’ நாளேடும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக, நிலைத்தன்மை நிலையமும் இணைந்து ஆசிய பசிபிக் நிலைத்தன்மைக் குறியீட்டை அறிமுகம் செய்துள்ளன.
வெவ்வேறு வட்டார நாடுகளில் அறிக்கை எழுதும் நடைமுறைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதை வர்த்தகங்கள் புரிந்துகொள்ள அந்தக் குறியீடு கைகொடுக்கும்.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் நிலைத்தன்மை அறிக்கை எழுதும் நடைமுறைக்கான தேவைகள் வெவ்வேறு வேகத்தில் வளர்ச்சி அடைவதால், பல்வேறு சந்தைகளின் நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வணிகங்களுக்குத் தெளிவான அடிப்படை தேவைப்படுகிறது.
சந்தைகள் ஒவ்வொன்றிலும் உள்ள 50 மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைப் புதிய நிலைத்தன்மைக் குறியீடு மதிப்பிடுகிறது. அந்தக் குறியீடு மொத்தம் 700 நிறுவனங்களை உள்ளடக்கியது.
மேலும், அறிக்கை எழுதும் நடைமுறைகளின் செயல்திறனை ஒப்பிடும்போது ஒழுங்குமுறைத் தேவைகளில் உள்ள வேறுபாடுகளையும் அது கணக்கில் எடுக்கிறது.
வணிகங்கள் தங்கள் அறிக்கை நடைமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறியவும் மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் வளங்களை மிகவும் திறம்பட ஒதுக்கீடு செய்யவும் ஒழுங்குமுறை மாற்றங்களுக்குத் தயாராகவும் அந்தக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தரவுகளுக்கு அப்பால், 2027ஆம் ஆண்டில் ஆசியான் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் ஏற்பதற்கு முன்னதாக, நிலைத்தன்மை அறிக்கையில், வணிகப் போட்டித்தன்மையில் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக, வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க அந்தக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் டைம்ஸ் செயல்படும்.
